நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்
நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, சென்னை, விலை 80ரூ.
பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களுமே சமூகத்தில் ஒரு மனிதரின் எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. அங்கு சந்திக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்குகிறவர்களான இருக்கிறார்கள். இந்த நூல் தலித் எழுத்தாளர்கள் பார்வையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்களை விவரிக்கிறது. இந்த நூலில் எல். இளையபெருமாள், ஒவீயர் சந்துரு, ரவிக்குமார், அழகிய பெரியவன், அபிமானி, விழி.பா. இதையவேந்தன், அ.ஜெகந்நாதன், சிவா.சின்னப்பொடி ஆகியோரின் ஆசிரியர்கள் பற்றிய நினைவலைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் மாறுபட்ட காலகட்டம், பின்னணி, இடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆப்பிளே சாப்பிட்டுப் பார்த்திராத அபிமானிக்கு ஆப்பிள் கொடுத்த ஆசிரியர், சிவா.சின்னப்பொடியை சுவரில் மோதிக் கதற வைத்த உயர்சாதி ஆசிரியர், சாதிப்பெயர் எழுதப்பட்ட பானையை தினமும் உடைத்த இளையபெருமாள், புத்தகங்களைச் சாப்பிட்டு ஆசிரியர்களிடம் வளரும் வாய்புப் பெற்ற ரவிக்குமார், பல்கலைக்கழகத்தில் போராடும் அ.ஜெகநாதன், அழகிய பெரியவனின் மனப்பலகையில் அன்பை எழுதியோர், விழி.பா. இதயவேந்தனின் அனுபவங்கள் என அழுத்தமான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: அந்திமழை, 1/12/2014.
—-
உல்லாசக் கப்பல் பயணம், சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து, கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம், சென்னை, விலை 200ரூ.
கப்பல் பயணம் சிங்கப்பூரில் இருந்து ஐந்துநாட்கள் குடும்பத்துடன் மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐந்துமாடி கப்பலில் சுற்றுலா சென்று திரும்பிய அனுபவம் இது. நூலாசிரியரான கிருத்திகா வெறும் பயண அனுழுவமாக இல்லாமல் இதையொரு நாவல் வடிவமாக ஆக்கி சுவாரசியமாகத் தர முயற்சி செய்திருக்கிறார். உல்லாசக் கப்பலில் பயணம் செய்கையில் என்னென்ன நடக்கும்? கப்பல் எப்படி இருக்கும்? என்ன சாப்பாடு கிடைக்கும்? எப்படி பயணம் செய்வது போன்ற தகவல்களை அங்கங்கே தெளித்துக்கொண்டே போகிறார். எளிமையான நடை. வாசிக்கும் அனைவரும் தாங்களும் இப்படியொரு கப்பலில் பயணம் செய்யமாட்டோமா என்றவொரு எண்ணத்தைத் தூண்டக்கூடியது இந்த நூல். இப்பயணத்தினூடாக சின்னதாக ஒரு காதல். பிரியும் மனநிலையில் இருக்கும் ஒரு தம்பதியினர் தங்களை உணர்ந்து ஒன்று சேர்தல் போன்ற கதைகளையும் கோர்த்துக் கொடுத்துள்ளார். நன்றி: அந்திமழை, 1/12/2014.