சிந்தனைக் களஞ்சியம்
சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், பக். 248, விலை 130ரூ.
தான் படித்து, பார்த்து, பழகிய செய்திகளை எல்லாம் தொகுத்து இந்த நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். நம் நாட்டுத் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகள் முதல் எம்.ஜி.ஆர். வரையும், வெளிநாட்டு சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி ஓஷோ வரை அனைவரைப் பற்றியும் நாம் அறிந்திராத பல விஷயங்களை இந்நூலின் மூலம் நாம் அறியலாம். உதாரணமாக, சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான முகமது அலி ஜின்னா அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் சேராமல் காங்கிரஸில் சேர்ந்ததற்குக் காரணம் என்ன? காந்தியடிகளை அரசிந்தர் சந்திக்க மறுத்தது ஏன்? இதுபோன்ற பல புரியாத, புதிரான கேள்விகளுக்கு இந்நூலில் விடைகள் உள்ளன. பெரியாரின் சாப்பாட்டில் மண்ணை அள்ளி போட்ட மணியம்மை, ஆங்கிலேய நீதிபதியின் பெயரை தன் மகனுக்குச் சூட்டிய வ.உ.சி., சாதாரண இந்தியப் போராளியிடம் மன்னிப்புக் கேட்ட சர்வாதிகாரி ஹிட்லர், காந்தியடிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படாததற்கு என்ன காரணம்? என்பன போன்ற பல அரிய, அறியாத தகவல்களும் இடம் பெற்றுள்ள உண்மையான சிந்தனைக் களஞ்சியம். நன்றி: தினமணி, 24/2/2015.