சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள்
சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள், முனைவர் ந. முருகேசபாண்டியன், செல்லப்பா பதிப்பகம் வெளியீடு, பக். 168, விலை 110ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-462-7.html அதியமானுடன் அவ்வைக்கு காதலா? இன்றைய பெண்கள், அழகு தேவதைகளாக, ஆராதனை சிலைகளாக, நுகர்வு தீனிகளாக, வேலியற்ற வேட்டை களமாக மாற்றப்பட்டுள்ளனர். இத்தகு சூழலில், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போற்றத்தக்க பெண் கவிஞர்களை, அவர்களின் பாடலோடு இந்த நூல் அற்புதமாய் படம்பிடித்து காட்டுகிறது. கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றண்டு வரை, 400 ஆண்டு காலம் சங்ககாலம் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பாடிய சங்கப் புலவர்கள், 473பேரில், 41 பேர் பெண்பாற் புலவர்கள். சங்ககாலப் பெண்களின் அறிவு, வளம், அழகு உணர்வு, குடும்பநலம், வீரம், காதல், சமூக நிலை, சமயம், மனத்திட்பம் போன்றவற்றை, அந்த பெண் கவிஞர்களின் பாடல்களால் அறிய முடிகிறது. சங்க காலத்திற்கு பின், காரைக்காலம்மையார், ஆண்டாள் தவிர பெண் கவிஞர்கள் இல்லை என்பதை இந்த நூலாசிரியர் ஆய்வு செய்து கூறியவிதம் பாராட்டிற்குரியது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பின்புலம், பாடல் வருணனைகளில் கலந்து தெரிகிறது. ‘முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்’ எனும் அஞ்சியத்தை மகள் நாகையார் பாடிய அகநானூறுப் பாடல், பலாமரக் குடத்தில் செய்த மத்தளக் கருவியை காட்டுகிறது. இன்றளவும் மிருதங்கம் பலாமரத்தில்தான் செய்யப்படுகிறது என்ற உண்மையை இதனால் உணர்கிறோம். காதலும், ஊடலும் மட்டுமல்ல, வீரமும் பேசுகிறது சங்கப் பெண் கவிதை புலம். சங்கப்பாடல்கள், தொடர்வண்டிகளாகப் போய் கொண்டே இருக்கும். அடையாளம் காண்பது அரிது. ஆனால், இந்த நூலில், பதங்களைப் பிரித்து, எளிமையான தெளிவுரை எழுதி இருப்பதால், படிப்பவர் முன்பாக பெண் கவிஞர்கள் பாடுவதைக் கேட்டு புரிந்துகொள்ள முடிகிறது. அரிய பல அறிவியல் செய்திகளையும், சங்கப் பாடல்களில் காண முடிகிறது. அகநானூறு, 16ம் பாடலில் நப்பசலையார், பெண் ஆமை இடும் முட்டைகளை, ஆண் ஆமை அடைகாத்து, குஞ்சு பொரிக்கும் செய்தியைப் பாடியுள்ளார். பெண் கவிஞர்கள் பற்றிய சிறுகுறிப்புகளை, நூலின் பின்னால் தந்துள்ள ஆசிரியர், அதியமானுடன் அவ்வைக்கு காதல் தொடர்பு (பக். 159) இருந்ததாக, மறுவாசிப்பு செய்துள்ளது மறுபரிசீலனைக்கு உரியது. ஊடல் கொள்ளும் பெண்களின், பாடல் புனையும் ஆற்றலுடன் அவர்தம் படைப்பாற்றலில் மிளிரும் புலமையும் கூறி, பெண்மைக்கு தமிழ்மகுடம் சூட்டும் நூலிது. – மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 29/3/2015.