அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2)
அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2), ஸ்ரீ வ. ந. கோபால தேசிகாசாரியார், அட்சுரா பதிப்பகம், சென்னை, பக். 152, 144, விலை 130ரூ, 130ரூ.
மகாபாரதம் பிரதான கதை பலரால் எழுதப்பட்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆனால் மகாபாரதத்துடன் தொடர்புடைய ஏராளமான கிளைக் கதைகள் அதிக அளவு வெளிவரவில்லை. அத்தகைய பல்வேறு கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தௌம்பயர்- ஆருணி, தௌம்யர் – உபமன்யு சம்பவங்கள் குருபக்திக்கான உதாரணமாக விளங்குகின்றன. பொறாமை கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சகோதரிகளான கத்ரு, வினதையின் கதை விளக்குகிறது. உருவத்தைக் கண்டு இகழக்கூடாது என்பதை வாலகில்யர்கள் என்ற முனிவர்களது கதையும், பெரியோரை இகழ்ந்தால் துன்பம் ஏற்படும் என்பதைப் பரீட்சித்து மன்னன் இறப்பும், மதுவினால் ஏற்படும் தீமைகளை சுக்கிராச்சாரியார் – தேவயானி சம்பவமும், முற்பகல் செய்தால் பிற்பகல் பலன் கிடைக்கும் என்பதை மாண்டவ்ய மகரிஷியின் சம்பவமும், சூதாட்டத்தால் ஏற்படும் தீமைகளை நளன்-தமயந்தி கதையும், வாய்மையே வெல்லும் என்பதை அரிச்சந்திரன் கதையும், மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதை அகத்திய முனிவரின் கதையும், தீதும் நன்றும் அவரவர் செயல்களாலேயே வருகின்றன என்பதை விதி வலிது என்ற கதையும், ஆண்களுக்கும் கற்பு அவசியம் என்பதை அஷ்டாவக்கிரர் கதையும், பசுவின் பெருமையை சியவன முனிவர் கதையும் விளக்குகின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சுவாரசியமாகப் படிக்கும் வகையில் கூறப்பட்டுள்ள இந்தக் கதைகள் வாழ்க்கைக்குப் படிப்பினை ஊட்டுபவையாகவும் உள்ளன. நன்றி: தினமணி, 24/2/2015.