காலத்தை வென்ற காவிய நட்பு

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய – ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்), பழ. நெடுமாறன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 708, விலை 800ரூ.

முப்பது ஆண்டு கால உழைப்பு. அசாத்தியமான தேடலுடன் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ள, பாராட்டுதலுக்குரிய நூல். மூன்றுவித தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கருவூலம் போன்றது இது. அதாவது 1. ரஷிய – இந்திய அரசியல் வரலாற்றுத் தொடர்புகள் குறித்தான தேடல். 2. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு வளர்ந்தது, இதை வளர்த்தவர்கள் யார், யார் என்கிற தேடல். 3. கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றபோதிலும் பொதுவுடைமையை வரவேற்ற இந்திய ஆளுமைகள் குறித்த தேடல் இருந்தும், ஆங்கிலத்தில் அதிகப் புலமை இல்லாத தமிழர்கள் அனைவருக்கும் இந்த நூல் பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் போன்றது. இந்த உழைப்புடன் நூலாசிரியர் இதை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், இது இந்நேரம் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பெரிதாகப் பாராட்டப்பட்டிருக்கும். இந்த நூலின் குறைகள் மூன்று. அவை நூலாசிரியர் பற்றியது அல்ல. பதிப்பகம் சார்ந்தது. 1. முப்பது ஆண்டுகளாக எழுதப்பட்ட நூல். அதன் மொழிநடை, சொல் பயன்பாடு ஆங்காங்கே மாறவே செய்யும். இதை காபி எடிட்டிங் மூலம் சீர் செய்திருக்க வேண்டும். 2. மிக அரிதான முரண்பாடு ஏற்படக் கூடிய அல்லது கூடுதல் விவரங்களைத் தேடும் ஆர்வத்தை ஈடு செய்யக் கூடிய இனங்களில் மட்டுமே அடிக்குறிப்பு தேவை. ஆனால் இந்த நூலில் ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒரே நூலின் பெயரை பல முறை (13 அல்லது 14 முறைகூட) அடுக்கிக்கொண்டே போகும்போது, அந்த அத்தியாயம் முழுமையும் அந்த நூலுக்குரியது என்பதான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. 3. பெட்டிச் செய்திகள் இப்புத்தகத்தின் தீவிரத்தன்மையக் குறைத்துவிடுகின்றன, அவை சுவாரஸ்யமான தகவல்கள் என்றபோதிலும்! தவிர்த்திருக்கலாம். அல்லது கடைசியில் பின்னிணைப்பாகச் சேர்த்திருக்கலாம். நன்றி: தினமணி, 20/4/2015.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *