இலங்கை பிளந்து கிடக்கும் தீவு
இலங்கை பிளந்து கிடக்கும் தீவு, சமந்த் சுப்பிரமணியன், தமிழில் கே. ஜி. ஜவர்லால், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 160ரூ.
ஒரு இனப்போரின் நிஜக்கதை ஒரு பத்திரிகையாளரான சமந்த் சுப்பிரமணியனின் பயணக் கட்டுரையாக விரிவடையும் இந்த நூல், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த முடிந்த ஒரு இனப்போரின் நிஜக் கதைகளை சொல்கிறது. போருக்கு பிந்தைய தமிழர்களின் வாழ்க்கை, ராணுவ நெருக்கடிகளில் கதைகள் துவங்கி, போரின் துவக்க காலங்களையும் கூறுகிறது. போரால் பாதிக்கப்பட்டோர், ராணுவத்தினர், ராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றிய தமிழர், விடுதலை புலிகள், புலி படையில் இருந்து தப்பியோடி வந்தோர், சிங்கள பவுத்தர், பவுத்த துறவிகள் போன்றோரின் சொந்த கதைகளையும், எண்ணங்களையும் போரின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறது. பொதுவான, தமிழ் ஈழம் தொடர்புடைய படைப்புகளை போல அன்றி, இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை கூறும்போதே, புலிகளின் வன்முறை, பயங்கரவாதம், தமிழர்கள், சிங்களர் என, பேதமின்றி நிகழ்த்தப்பட்ட கணக்கற்ற படுகொலைகள், மற்ற போராட்ட குழுக்களை அரித்தது, சிறார்களை கட்டாயப்படுத்தி கழுத்தில் சயனைடு கட்டி, பயிற்சியின்றி போரில் ஈடுபடுத்தியது போன்ற, பல உண்மைகளையும் இந்த நூல் வெளிப்படுத்தி உள்ளது. ராஜ்யத்தை துறந்து, துறவியான புத்தனின் பவுத்த சமயத்தில், துறவிகள் அரசியலில் ஈடுபடுவது, கட்சிகள் நடத்துவது, இறுதி போரில் புலிகளுக்கு 300 என்ற ஆங்கில திரைப்பட கேசட்டுகளை பிரபாகரன் கொடுத்து பார்க்க சொன்னது போன்ற, பல முரண்களையும் இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. போருக்கு பிந்தைய சிங்களமயதால், இந்து, முஸ்லிம் வழிபாட்டு தலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கும் பெரிய புத்தர் சிலைகள் ஆகியவை, வரலாறு, கலாசாரத்தை மாற்ற முனைவதும் சொல்லப்பட்டுள்ளன. இறுதிப்போரில் சரணடைந்த புலிகள், காணாமல் போனோர் பட்டியலில் உள்ளோர், அரசால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் கதைகள், அவர்களை மீட்க போராடும் சிலரின் வலிமிகுந்த சோக கதைகள், நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. வீடு உடைமைகளை துறந்து உயிரை காப்பற்ற ஓடும் மக்களிடம், அரிசிக்கம் பருப்புக்கும் ஆயிரக்கணக்கில் பணம் பறித்த வியாபாரம் போன்ற பல ரணங்களும் பதிவாகி உள்ளன. ஒரு போரால் நிகழும், யாரும் எதிர்பாராத வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், இடபெயர்ச்சியின் கொடூரம் போன்றவற்றை, நெருடல் இல்லாத மொழிபெயர்ப்பு, மனதில் பதிக்கிறது. நன்றி: தினமலர், 12/4/2015.