ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழா கட்டுரைகள் தொகுப்பு நூல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 576, விலை 560ரூ.

முதல் முன்னோடி நூல்; புதுவரவு தமிழியியலின் பல்வேறு பொருண்மைகளின் சங்கமே, இந்த நூல். சென்னை பல்கலை பேராசிரியர் வீ. அரசிடம், ஆய்வு செய்த, பல ஆய்வாளர்களது பல்வேறு ஆய்வு பொருண்மை குறித்த, 85 கட்டுரைகளும், பேராசிரியரது தன் விவரக் குறிப்பு குறித்த ஒரு கட்டுரையும் ஆக, 86 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், இக்கால இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், அச்சுப் பண்பாடு, பதிப்பு, ஆவணம் என பல்வேறு தடங்களிலும் பயணிக்கின்றன, இந்த நூலின் கட்டுரைகள். மரபு இலக்கியம், இலக்கணம் குறித்து, உரையாசிரியர், கற்பித்தல் நெறி, புறநானூறு தொகுப்பு முறை, மறைந்த தமிழ் இலக்கணங்கள் மீட்டுருவாக்கம், நீதிநூல்கள் உருவாக்கம், தொல்காப்பிய சொல்லதிகார பதிப்புகள், நன்னூல் பதிப்புகள் முதலிய பல கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்று உள்ளன. சங்க இலக்கியங்களை பதிப்பித்த முறை, அவற்றில் உள்ள சிக்கல்கள், நீதி நூல்கள் தோன்றுவதற்கான தேவை, மறைந்த தமிழ் இலக்கண நூல்கள், முதலிய பல கருத்துகளை எடுத்துரைப்பனவாக இவை அமைகின்றன. நாட்டார் வழக்காற்றியலில், நிகழ்த்து கலை மரபு, பொருள் சார் மரபு, நாட்டார் பாடல்கள், கானா கதைப்பாடல்கள், மந்திரம், சடங்கு, சிறார் வழக்குகள், நாட்டார் வழிபாடு என பல பொருண்மைகளில் அமைந்த கட்டுரைகள், அந்த வழக்குகளை பதிவு செய்திருப்பதோடு மட்டுமின்றி, அதற்கான காரண காரியங்களை விவாதிக்கும் ஆய்வு போக்கையும் நமக்கு காட்டுகின்றன. அச்சு பண்பாடு குறித்து தமிழ் நாவல் உருவாக்கம், சைவ நூல் உருவாக்கம், தமிழ் இதழியல், இதழ்களில் பெண்கள், அச்சகங்கள், தமிழ் பாடநூல்கள், இலக்கண நூல் உருவாக்கம் முதலான பல கட்டுரைகள் காணப்படுகின்றன. அகராதி, கலைக்களஞ்சியம், தொல்லியல், வானொலி, தமிழ்ப் பாடநூல் உருவாக்கம் தொடர்பான கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளன. சென்னை, திருச்சி அகில இந்திய வானொலி நிலையங்கள், 1938 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில், தமிழியல் சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின. ஐரோப்பியர்களால் தமிழ்ப் பாட நூல்கள், அதிக அளவு வளர்ச்சி பெற்றன முதலான பல உண்மைகளையும் இவற்றின் வழி அறியமுடிகிறது. பேராசிரியரது பணி நிறைவு நாளில், பேராசிரியரையும் மாணாக்கரையும் சிறப்பிக்கும் வகையில் உருவான இந்த நூல், தமிழுலகிற்கு ஒரு முதல் முன்னோடி நூலாகவும், புதுவரவாகவும் அமைகிறது. இந்த நூலை உருவாக்கியவர், பாராட்டுக்குரியவர்கள். ஆய்வாளர்களுக்கு இது முக்கியமான நூல். -முனைவர் இராஜ. பன்னிருகை வடிவேலன். நன்றி: தினமலர், 19/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *