பொலிவியன் டைரி
பொலிவியன் டைரி, எர்னெஸ்டோ சே குவாரா, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 350, விலை 220ரூ.
லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க எர்னெஸ்டோ சே குவாராவும், அவரது தோழர்களும் புரட்சிப் போராட்டம் நடத்தினர். புரட்சிப் போராட்டக் களத்தின் தினசரி நிகழ்வுகளை சே குவாரா பதிவு செய்துள்ளார். அது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சே குவாரா என்ற தனியொரு மனதின் மறைந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இன்றும் உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் மத்தியில் புரட்சியின் வித்தாகவுள்ளார் என்றால், அதற்குக் காரணம் அவரின் சுயநலமற்ற செயல்பாடுகள்தாம். ஒரு புரட்சியாளன்தான் எடுத்த செயலில் வெற்றியடைய வேகம் மட்டுமல்ல, விவேகமும் அவசியம் என்பதை வாழ்ந்து காட்டி நிரூபித்துள்ளார் சே குவாரா. எதிரிகள் தூண்டினாலும், தேவைப்பட்டாலொழிய ஆயுதத்தை எடுக்கக்கூடாது என்று புரட்சியாளர்களிடம் அழுத்தமாக சே. குவாரா வலியுறுத்தினார். அவர் எந்த அளவுக்கு மனிதநேயத்துடன் கூடிய போர் தர்மத்தைக் கடைப்பிடித்தார் என்பதை இது தெளிவாக்குகிறது. இந்நூலின் தமிழாக்கம் மிகவும் சிறப்பாகவுள்ளது. வரலாற்றுப் பொக்கிஷமான இந்நூல், இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல்களில் மிகவும் முக்கியமானது. நன்றி: தினமணி, 16/2/2015.