இதிகாசங்களில் போர்க்களங்கள்
இதிகாசங்களில் போர்க்களங்கள், எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 304, விலை 250ரூ.
இராமாயண, மகாபாரத போர்க்களக் காட்சிகளை கம்பனுடைய பாடல்களிலிருந்தும், வில்லிப்புத்தூர் ஆழ்வாரின் பாடல்களிலிருந்தும் மிகவும் சுவைபட வர்ணித்திருக்கிறார் நூலாசிரியர். இராமனுடன் 70 வெள்ளம், ராவணனுடன் ஆயிரம் வெள்ளம் படையும் இருந்தது என்று கூறி வெள்ளத்தின் எண்ணிக்கையை விவரிக்கும் போது உண்மையிலேயே மூச்சு முட்டுகிறது. இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யும் இடத்துக்குள் லட்சுமணன் செல்வதைச் சொல்லும் பாடலில் மாவாளிகள் என்ற சொல்லை வெவ்வேறு பொருள்பட 4 இடங்களில் கம்பர் பயன்படுத்தியிருப்பது அவருமை. போரில் ஜயத்ரதன் இறந்தான் என்பதைக் கேட்ட துரியோதனன் குமுறுவதை முன்பட்டான் என்ற பாடலில் வில்லிபுத்தூரார் வர்ணித்திருப்பதும் அருமை. இதே போன்று பல இடங்களிலும் இருவரது பாடல்களும் பலாச் சுளைக்குத் தேன் மேலும் இனிமையைச் சேர்ப்பது போன்று இரு இதிகாசங்களுக்கும் சுவையைக் கூட்டுகின்றன. ஏற்கெனவே ஓரளவு கேள்விப்பட்டுள்ள கதைகளாக இருந்தபோதிலும், இந்திரஜித் யுத்தம், அபிமன்யு யுத்தம் உள்பட அனைத்தையுமே நூலாசிரியர் கூறியுள்ள பாங்கு, படு விறவிறுப்பான ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. நன்றி: தினமணி, 27/4/2015.