காசி இராமேசுவரம்
காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ.
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க மேற்கோள்களுடன் விளக்குவது அவருக்குக் கைவந்த கலை என்று இந்நூலாசிரியரைப் பற்றி சரியான மதிப்பீட்டை தனது வியப்புரையில் தந்திருக்கிறார் திரிபுரா மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலர் ப.ஸ்ரீ. இராகவன். அவர் கூறியபடி காசி இராமேசுவரம் ஆகிய இரு புண்ணி தலங்களைப் பற்றி அரிய பல தகவல்களைக் கதைத் தொடர்போடும், இலக்கிய ஆதாரங்களோடும், சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிக்க உரைகளோடும் தக்க மேற்கோள்களோடும் தந்திருக்கிறார். காசி இராமேசுவரம் பற்றிய தேவாரப் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்றவற்றுடன், காசி இராமேசுவரத்தின் பெயர்க்காரணம் , அத்தலங்களின் பெருமை, கோயில் வரலாற்றுடன் மன்னர் சேதுபதிகள் வரலாற்றையும் இணைத்துப் படிப்பதற்கு சுவாரசியமாகத் தந்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. இந்நூலாசிரியரின் காசி இராமேசுவரம் தொடர்பான பணிவுரையே அரிய தகவல்களை அள்ளித் தருகிறது. நன்றி: தினமணி, 27/4/2015.