வெற்றி வெளியே இல்லை
வெற்றி வெளியே இல்லை, ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 225ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-459-2.html ரயில் வண்டியில் ஒரு தொழிற்சாலை சீனாவில் ஷ்யாங்கே நகரத்திலிருந்து கடலில் நகரும் தொழிற்சாலையாக ஒரு கப்பல் புறப்படுகிறதாம். நியூயார்க் செல்லும் வழியில், நிற்கும் இடங்களிலெல்லாம் பொருட்களை வாங்கிச் சேகரித்து, அவற்றைக்கொண்டு கப்பலிலேயே உற்பத்தியை முடித்து, நியூயார்க்கில் முழுமையடைந்த பொருட்களாக விற்பனை செய்கிறார்களாம். இப்படி உற்பத்தி நேரம், பயண நேரம் இரண்டையும் ஒன்றாக்க முயற்சிக்கிறார்களாம். நீண்ட ரயில் பாதைகள் உள்ள நம் நாட்டில் காஷ்மீர் ஆப்பிளை அங்கிருந்து வாங்கி இதுபோன்ற ஒரு தொழிற்சாலை ரயிலில் வைத்துப் பதப்படுத்தித் தென்னிந்தியாவுக்கு ஜாம் ஆகவும் ஜுஸ் ஆகவும் உற்பத்திப் பொருளாக மாற்றிக்கொண்டு வர முடியாதா? என்று கேட்கிறார் பேராசிரியர் பாலா பாலச்சந்திரன். புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள புதுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் நடுத்தர வசதியுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று உலகளாவிய அளவில் பெருமையோடு வலம் வருகிற சிந்தனையாளர், செயல் வீரர் இந்த மனிதர். தனக்கு வாழ்வளித்த சிகாகோ நகரின் நினைவைப் போற்றுகிற விதமாக, கிழக்குக் கடற்கரைச் சாலையில் கிரேட் லேக்ஸ் என்ற பெயரிலேயே நிர்வாகவியல் கல்லூரியை நிறுவி வெற்றிகரமாக நடத்திவருகிறார் பாலா. ஏரிகள் நிறைந்த சிகாகோ நகருக்கு லேக் சிட்டி என்கிற ஒரு பெயருண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ அரசியல் காரணங்களுக்காக இன்றைய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்கப்படாமலிருந்தது போலவே நாற்பதாண்டுகளுக்கு முன்னால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் விசா வழங்குவதில் சிக்கல்கள் இருந்திருக்கின்றன. அப்போது அவர் புதிதாகத் தொடங்கியிருந்த அரசியல் கட்சிக்கு நிதி சேர்க்க வருகிறாரோ என்று எண்ணித் தயங்கியிருக்கிறார்கள். பல்கலைக்கழக அழைப்பாக ஏற்பாடு செய்து புரட்சித் தலைவருக்கு விசா கிடைக்க உதவியவர் இந்த பாலா. அந்த ஏற்பாட்டுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக டாக்டர் உதயமூர்த்தியை டாக்டர் உதயமூர்த்தியை உடனழைத்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குக் கூடப்போகாமல் நேரே டாக்டர் பாலாவின் வீட்டுக்கே வந்துவிட்டாராம் எம்.ஜி.ஆர். இப்போதுபோல் கைபேசி வசதிகள் எதுவும் இல்லாத காலம் அது. டாக்டர் பாலாவின் துணைவியார் அவசரமாகத் தயாரித்துத் தந்த புளியோதரை, தயிர் சாத உபசரிப்பையும் ஏற்று மகிழ்ந்திருக்கிறார் அந்தத் தலைவர். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த சமயம் கிரேட் லேக் நிர்வாகவியல் கல்லூரிக்காக நாலெட்ஜ் சிட்டியில் முப்பது ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அப்போது பதினைந்து ஏக்கர் போதும் என்று சொன்னவர் டாக்டர் பாலா. ஸ்ட்ரேஞ்ச்! என்று வியந்த அம்மையார், நீங்கள் 15 ஏக்கர் மட்டுமே போதும் என்று சொல்லுவது நாங்கள் சரியான நபருக்கு உதவுகிறோம் என்ற சந்தோஷத்தைத் தருகிறது என்றும் சொல்லி வாழ்த்தினாராம். தம்முடைய இளம்பருவத்து ஆசிரியர்களையும் மறவாமல் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள பாலா,மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த தம்முடைய தாயாரைத் தாம் கல்வி கற்ற முதல் பல்கலைக்கழகம் என்று போற்றுவது நெகிழ்ச்சியானது. அது அந்தத் தலைமுறையில் வாழ்ந்தவர்களின் கொடுப்பினை. புதிய தலைமுறை இதழில் ரமணன் எழுதித் தொடராக வெளியான இந்தக் கட்டுரைகள் இப்பொது நூலாக வெளிவந்ததிருக்கிறது. வெற்றி என்பது ஒரு சொல் மட்டுமே. ஆனால் அதைச் சென்றடைவது வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிற இந்த அழகான நூல் சாதிக்க விரும்புகிறவர்கள் அனைவருக்கும் பயனுள்ள கையேடாக உதவும். -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 22/3/2015.