யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 208, விலை 180ரூ.

நாவலின் மையம் தேவி. நாவலின் முதுகுத்தண்டும், பொருள்பரப்பும் அவளே. கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி கல்வியே குறியாக அவள் செயல்படுகிறாள். சிறிய வயதிலேயே தாயின் வற்புறுத்தலால் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் விதவையான பிறகு அந்தக் குற்றவுணர்ச்சி தாங்க முடியாது அவளை வெறி கொண்டு படிக்க வைக்கும் சாம்பசிவம் போன்ற எளிய மனிதர்களாலும்தான் பெண் விடுதலை சாத்தியமாகிறது. தனக்கான பாதையைத் தானே வகுத்துக்கொண்டு தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்ளும் தேவியின் வாழ்வை, வரலாறு போல மகள் சாரு அளிப்பதாக அமைந்தள்ளது நாவல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆண்டும், இடமும் சொல்லப்படுவது சிறப்பு. நேர்கோட்டு எழுத்தைத் தவிர்த்து முன்னும் பின்னுமாய் நாவல் செல்வதால் கடந்த காலச் சம்பவங்களை அனுபவ முதிர்வுடன் பின் பார்வையிட முடிகிறது. தேவி, மகள் சாருவின் நிம்மதியான வாழ்வில் வேடதாரியான ஒருவன் நுழைந்தவுடன் நாவலின் திசை மாறுகிறது. பல விகாரமான நிகழ்வுகளுக்குப் பின் அவனிடமிருந்து விலகி தனியே வாழ்க்கையைத் தொடர சாரு முடிவெடுக்கிறாள். இளம் விதவைப் பெண்களுக்குப் புகலிடமாக ஐஸ் ஹவுஸ் விடுதியைத் திறம்பட நடத்தி வந்த சுப்புலட்சுமி அக்கா, சுவாரசியமான பேச்சும், நகைச்சுவை உணர்வும் கொண்ட தேவியின் தோழி சில்வியா ஆகியோரின் பாத்திரப்படைப்பும் கச்சிதம். நூலாசிரியரின் மொழி ஆளுமையும், தெளிவும், அதே சமயம் அழுத்தமான வார்த்தைப் பிரயோகங்களும் இந்த நாவலின் பலம். நன்றி: தினமணி, 4/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *