ஆயுஷ் குழந்தைகள்
ஆயுஷ் குழந்தைகள், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, விலை 390ரூ.
நவீன உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வரும் வாழ்க்கை சூழல், பாரம்பரிய வாழ்வியலோடும், சித்த மருத்துவத்தோடும் தொடர்புடைய குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்து இந்த நூல் விளக்குகிறது. கரு உருவாவதில் இருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், குழந்தைகளுக்கான சித்த மருத்துவம், பாரம்பரிய நோய் தடுப்பு முறைகள், ஆகிய அனைத்தையும் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் விரிவாக விளக்கியுள்ளார். மருந்து ரெடி என்ற தலைப்பில், நோய் தீர சித்த மருத்துவக் குறிப்புகளைப் பெட்டிச் செய்தியாக கொடுத்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.
—-
சிராஜ் அப்துல் ஹை கட்டுரைகள், சிராஜும் முனீர் நற்பணி மன்றம், நெல்லை, முதல் பாகம் 60ரூ., இரண்டாம் பாகம் 200ரூ.
1974-84 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எழுத்தாளரும், பேச்சாளருமான சிராஜ் அப்துல் ஹை, சமயம் சார்ந்தும், சமுதாயம் சார்ந்தும், இஸ்லாமிய அரசியல் சார்ந்தும் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் மற்றும் கேள்வி – பதில், பொது நிகழ்ச்சிகளில் அவர் உதிர்த்த சிலேடை நயம் ஆகியவை புத்தக உருவம் பெற்றுள்ளன. அன்றைய தினம் வரவேற்பைப் பெற்ற அனல் பறக்கும் கட்டுரைகளை, இன்றைய இஸ்லாமிய இளைஞர்களும் படித்துப் பயன்பெறலாம். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.