கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி
கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ.
மூத்த தமிழ் எழுத்தாளரான மு. ஸ்ரீனிவாஸன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதி வருபவர். இவருடைய கட்டுரைகள், கதைகள், கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த மஞ்சரி, பிறர் கவனத்துக்கு வராத பல அம்சங்களை எளிய நடையில் வாசகர்களிடம் சேர்க்கிறது. அறிவியல் தமிழ் எழுத்தாளரான பெ.நா. அப்புசுவாமியின் கடிதங்கள் குறித்த கட்டுரையில் அவரது மேதைமையும் தன்னடக்கமும் வெளிப்படுகின்றன. சிறையில் தவம் என்ற கட்டுரை, பர்மாவின் மாண்டலே சிறையில் ஆறு ஆண்டுகள் அடைக்கப்பட்ட விடுதலை வீரர் பாலகங்காதர திலகர், அலிப்பூர் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்ட புரட்சியாளர் அரவிந்தகோஷ் ஆகியோரின் மன உறுதியைக் காட்டுகிறது. லாலா லஜபதிராயும் விபின சந்திரபாலும், ஸ்ரீ அரவிந்தரும் சுவாமி விவேகானந்தரும், பாரதியாரும் கேசவசுதரும் ஆகிய கட்டுரைகள், வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்த மாபெரும் ஆளுமைகளின் கருத்திணக்கத்தை வெளிப்படுத்துகின்றன. ரவீந்திரநாத தாகூர், கி.வா. ஜகந்நாதன், என். ரகுநாதன், பி.எஸ். ராமையா, அ.சீநிவாசராகவன் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அந்தச் சான்றோருக்கு எழுத்தில் வடித்த அற்புத அஞ்சலிகள். இலங்கையில் கண்ணகி, பாகவதச் சிற்பங்கள், அசோகனது கல்வெட்டு, வைசாலி உள்ளிட்ட கட்டுரைகளில் மிளிர்கின்ற வரலாறும், கலையும், நமது பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்ள வைக்கின்றன. இந்தப் படைப்புகள் வெளியான இதழ்கள், தேதிகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கலாம். தொகுப்பில் உள்ள கட்டுரைகள் தொடர்பான கிடைத்தற்கரிய அழகிய வண்ணப்படங்களைத் தனியே தொகுத்து வெளியிட்டிருப்பது நூலுக்கு சிறப்புச் சேர்க்கிறது. நன்றி: தினமணி, 1/3/2015.