நெருப்பில் பூத்த ஆசிரியர்
நெருப்பில் பூத்த ஆசிரியர், கலைமாமணி எஃப் சூசை மாணிக்கம், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ.
குத்துமதிப்பாய்ப் போட்ட மதிப்பெண்கள் தேர்வு விடைத்தாளை முறையாகத் திருத்தி மதிப்பெண் போடப்படவில்லை. மொத்தமாக விடைத்தாளின் மூலையில் 28 என்று போடப்பட்டிருக்கிறது, மாணவர் எதிர்பார்ப்பு அறுபதுக்கு மேலே, கேட்டிகிறார். ஆசிரியரின் பதில் இது, “டேய்! நீ பெரியசாமி மகன்தானே… உனக்கு அவ்வளவுதானடா மார்க் போட முடியும். உன்னாலே இருபத்தெட்டு மார்க்தாண்டா எடுக்க முடியும். மடப்பய மவனே, உட்காருடா.” இப்படி ஒரு நிலை இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. பிறப்பை வைத்து, இன்னாருடைய பிள்ளை என்பதை மட்டும் வைத்து, விடைத்தாள்களைத் திருத்தாமலே குத்துமதிப்பாக மார்க் போட்ட ஆசிரியர்களும் இருந்திருக்கிறார்கள். தன் வரலாற்றைச் சுவைபட அழகாக ஒரு கதைபோல் எபதியிருக்கிறார் கலைமாமணி எஃப் சூசை மாணிக்கம். தன்னுடைய பெயரை சாமிக்கண்ணு என்பதாக வைத்து வேறு யாரோ ஒருவரைப் பற்றி எழுதுவதுபோல் வித்தியாசமான முறையில் இதை எழுதியிருக்கிறார். நேர்மையாகப் பணியாற்ற ஒரு பள்ளி ஆசிரியரால்கூட முடியவில்லை என்பதைப் பக்கத்துக்குப் பக்கம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிற தன் வரலாற்று நூல் இது. முதல் 25 பக்கங்களில் மிகவும் உருக்கமான வாழ்வின் தொடக்க காலங்களைச் சொல்லிவிட்டு, தாம் வாழ்க்கையின் ஆசிரியர் என்ற முறையில் எதிர்கொண்ட பிரச்னைகளையும், அவற்றைச் சமாளித்த முறையையும் அப்பட்டமாக எழுதியுள்ளார். சில அரசியல் தலைவர்கள் தேர்தல் பணிகளில் ஒழுங்காக ஈடுபட விடாமல் அடாவடி செய்திருப்பதையெல்லாம் பெயர் குறிப்பிட்டே இவர் எழுதியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. -யெஸ்பாஸ். நன்றி: கல்கி, 7/6/2015.