நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 165ரூ.
தமிழ்நிலத்தில் வேளாண் சிந்தனையை விதைத்தவர். தனது எண்ணங்களை வியாபாரப் பொருளாக மாற்றாதவர். பேச்சு வேறு, செயல் வேறு என வாழாதவர். மண்ணுக்குள் புதையும் வரை சொன்ன சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், பசுமைப் போராளி நம்மாழ்வார். சிலர் பேசுவார்கள். செயல்பட மாட்டார்கள். சிலர் செயல்படவும் செய்வார்கள். தான் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், நம்மாழ்வார் சிந்தித்தார், செயல்படுத்தினார். தன்னோடு சேர்ந்து ஏராளமானவர்களையும் செயல்பட வைத்தார். மறைவுக்குப் பிறகும் அவரது பச்சைத்துண்டு பசுமைப் பாதையைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. அவரது வாழ்க்கையை பசுமை விடகன் இதழின் பொறுப்பாசிரியர் பொன். செந்தில்குமார், மண் மணம் மாறாமல் தொகுத்துக்கொடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்து, கோவில்பட்டி அரசு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து வெறும் கோப்புகளில் விவசாயம் பார்க்க வேண்டுமா என்று கோபப்பட்டு, அரசு வேலையைத் துறந்து களத்தில் சேறும் சகதியுமாக இறங்கிய வாழ்க்கை நம்மாழ்வாருடையது. ரசாயன உரங்கள் நிலத்தை ரணம் ஆக்குகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகள் செடிகளையே கொல்கின்றன என்பதை தனது ரத்தம் உறையும் வரை சொன்னவர் நம்மாழ்வார். ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம்தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் விவசாயத்தை நம்பி இருந்தவர்கள் மட்டுமல்ல, வேறு தொழிலில் இருந்தவர்கள்கூட நிலத்தை நம்பி இறங்க ஆரம்பித்தார்கள். தற்சார்பு என்ற உணர்ச்சியமயமான உத்வேகத்தை விவசாயிகள் மத்தியில் விதைக்கத் தொடங்கியவர் நம்மாழ்வார். தனிமனிதனாக இருந்தாலும் ஒரு கிராமமாக இருந்தாலும் அதற்கு தற்சார்பு அவசியம் வேண்டும். நிலத்தை நம்பி இறங்குங்கள் என்கிறார் நம்மாழ்வார்.இந்தக் கருத்துகள் அனைத்தையும் தன்னுடைய வாழ்வியல் வழியில் விளக்குகிறார். நம்மாழ்வாரை அவரது மனைவி சாவித்திரி, “நீங்கள் அரசு அதிகாரியாக இருந்தால்தானே உங்களைக் கைப்பிடித்தேன். அரசுப் பணியில் சேருங்கள். நீங்கள் ஏன் அரசுப் பணியைத் துறந்து கீழ்நோக்கிப் பயணிக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். “ஞானம் வந்தது, விலகி வந்துவிட்டேன்” என்று இவர் பதில் சொல்லி இருக்கிறார். “இந்த ஞானம் திருமணத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் மனைவி. இதனைச் சொல்லிவிட்டு நம்மாழவார் எழுதுகிறார்- “அதிலும் நியாயம் இருக்கிறதுதானே!” என்று. இப்படிப்பட்ட சத்தியாவனை முழுமையாக தரிசிக்கும் வாய்ப்பை இந்தப் புத்தகம் தருகிறது. நன்றி: ஜுனியர் விகடன், 7/6/2015.