விமர்சனப் புயல்
விமர்சனப் புயல், க. நா. சு. இராம. இலக்குவன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 272, விலை 200ரூ.
நூலாசிரியர் முனைவர் பட்டம் பெற க.நா.க.வின் திறனாய்வுப் பணிகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வே இந்த நூல். வணிக, கலை இகழ் படைப்பாளிகளின் உள்ளங்களை அசைத்தும், அதிரவும் வைத்த க.நா.சு. தரமான புதினங்கள் இவை என சுட்டிக்காட்டியதுடன் தரமற்றவற்றைக் கடுமையாக விமர்சித்து உலகத் தரம் நோக்கி நம் எழுத்தாளர்கள் கவனம் செல்ல வேண்டும் என்றும் உரைத்தவர். சிறந்த முதல் தரச் சிறுகதையாளர் நால்வர். அவர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, லா.ச.ரா. எனப் பட்டியலிட்டுள்ளார். சிறந்த நாவல் சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் என்று பாராட்டியுள்ளார். க.நா.சு.வின் பல்வேறு இலக்கிய விமர்சனங்களை ஒருசேர காண இந்த நூல் உதவுகிறது. மேலை நாட்டுத் தாக்கம் க.நா.சு.விடம் இருந்த போதிலும் தமிழ் மரபில் தமிழ் திறனாய்வு வளர வேண்டும் என்பதே அவர் கொள்கை. இதற்காக அவர் சில வழிகாட்டுதல்களையும் காட்டினார் என்பதை க.நா.சு.வின் நிறையாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். க.நா.சு. விமர்சனத்துக்கு என்று தெளிந்த நடையைக் கையாளவில்லை. உணர்ச்சி வசப்பட்டு புகழ்வதும் திடுமென்று உணர்ச்சி மயமாய் தன் கூற்று அமைந்துவிடுமோ என எண்ணி அடுத் நொடியிலேயே கூறிய வேகத்தைக் குறைத்துக் கொள்ள, பயன்படுத்திய சொல்லுக்கு எதிரான சொல்லைப் பயன்படுத்தவதும் அவரது விமர்சன இயல்புகளில் ஒன்று என குறையையும் நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். நன்றி: தினமணி, 1/6/2015.