நாடாளுமன்றத்தின் கதை
நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் புதுத்தகம் வெளியீடு, பக். 408, விலை 240ரூ.
இந்திய பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருக்க வேண்டும். இந்தியாவை உருவாக்கிய சட்டங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்தவராக அருணகிரி விளக்குகிறார் என்பதை நாடாளுமன்றம் அமைந்த விதத்தை அவர் விளக்கும்போதே நிரூபணமாகிவிடுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, தலைமைச் செயலாகம், தலைவர்கள், பிரதமர்கள், நாடாளுமன்ற நடைமுறைகள், தேர்தல் ஆணையம், ஆணையர்கள், தேர்தல் நடைமுறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உரிமைகள், அதிகாரங்கள், பொறுப்புகள், சலுகைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி ஆராய்ந்து, படிப்போரை வியக்க வைக்கும் விதத்தில், தகவல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர். இந்திய பாராளுமன்றம் யாரால் திறக்கப்பட்டிருக்கிறது என்பது முதல் நாடாளுமன்றத்தின் அத்தனை உட்பிரிவுகளையும் அதன் அமைப்பையும் அது இயங்கும் விதத்தையும் தொகுத்துத் தந்துள்ளது அவரது தேடலுக்கான உழைப்பை நமக்குக் காட்டுகிறது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள்கூட இவ்வளவு தரவுகளை தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இனி உறுப்பினராக விரும்புகிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. இந்திய பாராளுமன்ற வரலாற்றை ஆய்வு செய்வோருக்கு இந்நூல் ஒரு முன்னோடி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2015.
—-
வாய்மொழி இலக்கியமும் பாரம்பரிய மருத்துவமும், வைத்தியர் ப. செல்வம், ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம், வேலூர், பக். 115, விலை 150ரூ.
ஆயிரம் ஆண்டுகளாக பரவிக்கிடந்த பாரம்பரிய மருத்துவ அறிவை, வாய்மொழி இலக்கியங்களான பழமொழி வழி நமக்கு உணர்த்துகிறார் நூலாசிரியர் செல்வம். ஒரு பழமொழியின் கருப்பொருள், மருத்துவச் செய்தியை எப்படி தாங்கிவருகிறது… அதன் உட்பொருள் என்ன என்பதை அழகாக விளக்கிச் சொல்கிறார். மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் என்ற பழமொழிக்கு நூலாசிரியர் தரும் விளக்கம் வித்தியாசமாக உள்ளது. காம உணர்வைத் தூண்டும் குணம் மாங்காய்க்கு உண்டு என்பதைக் கூறி, அதை மாதா ஊட்டாத சோறு என்று நம்மை வியக்க வைக்கிறார். இதுபோல் பழமொழிகளுக்கு அவர் தரும் விளக்கம் புதிது. பயனுள்ள மருத்துவக் குறிப்பு நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2015.