பஞ்ச நாராயண கோட்டம்
பஞ்ச நாராயண கோட்டம், காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், பக். 720, விலை 300ரூ.
சமண சமயத்தின் கேந்திரமான ஹொய்சாள சாம்ராஜ்யம், வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அங்கு அழகு வாய்ந்த பஞ்ச நாராயண கோட்டங்கள் உருவாக்கப்பட்டதை கோவையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல். குலோத்துங்க சோழனின் சைவ வேட்கைக்கு அடிபணியாது, வைணவ ஆச்சார்யார் ராமானுஜர், திருவரங்கத்திலிருந்து ஹொய்சாளத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கு சமண மன்னரான பிட்டி தேவனின் மகளான வசந்திகாவைப் பிடித்திருந்த பேயை விரட்டி நோயை விரட்டியதால், வைணவத்தைத் தழுவினான் பிட்டிதேவன். தனது பெயரையும் விஷ்ணுவர்த்தனன் என மாற்றிக் கொண்டான். தொண்டனூரில் நம்பி நாராயணனும், தலக்காட்டில் கீர்த்தி நாராயணனும், யருகிரியில் ஏற்கெனவே உள்ள செல்வ நாராயணனும், பிட்டிதேவனின் முதல் மனைவி லட்சுமியை சிறை வைத்திருந்த வேளாபுரத்தில் விஜய நாராயணனும், ஹெய்சாள நாட்டின் வட நுழைவு வாயிலிலே வீரநாராயணனும் கோயில் கொள்ள வேண்டும். இந்தப் பஞ்ச நாராயண கோவில்களை எழுப்பும் பணியில் ஈடுபட வேண்டும் என ராமானுஜர் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி ஒவ்வொரு கோட்டமும் எப்படி உருவானது? அதற்காக அரசன் விஷ்ணு வர்த்தனன் சந்தித்த சவால்கள், சோதனைகள், உயிரிழப்புகள் குறித்து விளக்குகிறது இந்த நாவல். ஹொய்சாள வம்ச விருத்திக்காக அரசன் பிட்டிதேவன், காதலித்த வைணவப் பெண் லட்சுமியையும், அரசின் விருப்பத்துக்காக அந்நாட்டின் தளபதியின் மகள் ஷாந்தலாவையும் மணந்துகொண்டது, ஷாந்தலாவின் சூழ்ச்சி, லட்சுமி சிறை சென்றது என பல சுவையான சம்பவங்கள் நிறைந்த இந்நாவலை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. நன்றி: தினமணி, 29/6/2015.