சரித்திரக் கடலின் முத்துக்கள்
சரித்திரக் கடலின் முத்துக்கள், ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி, முஸ்லிம் குரல் கம்ப்யூட்டர் பிரின்ட் வெளியீடு, சென்னை, பக். 200, விலை 100ரூ.
மூத்தப் பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், மருத்துவம், அரசியல், வரலாறு, பொன்மொழிகள் என்று பல துறைகளிலும் உள்ள பல்வேறு அரிய தகவல்களையும் திரட்டி, தகவல் களஞ்சியமாக இந்நூலை உருவாக்கியுள்ளார். 15ஆம் நூற்றாண்டில் அப்போதைய குருமகா சன்னிதானமாகிய மதுரை ஆதீனத்தை, மாமன்னர் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூரும், 1786, 1790 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய குருமகா சன்னிதானத்தை மாவீரர் திப்பு சுல்தானும் சென்று தரிசித்து, பல்வேறு பொருட்களைப் பரிசளித்து மகிழ்ந்த தகவல்கள் இந்நூலில் உள்ளன. ஹிந்து என்ற பெயரை யார் உருவாக்கியது? என்ற முதல் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் படிக்க புதுமையாக உள்ளன. தர்காக்களில் நடைபெறும் விழாக்களும் ஹிநதுக்களின் பங்களிப்புகளும், ஹிந்துக் கோவில்களுக்கு முஸ்லிம் மன்னர்களும், நவாப்களும் வழங்கிய தானங்களும் மதநல்லிணக்கத்தை பறைசாற்றுகின்றன. சேப்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை போன்ற பெயர்கள் எப்படி வந்தன. இது கதை அல்ல நிஜம் என்ற கட்டுரையில் கூறப்பட்டள்ள அதிசயமான சம்பவம், நாத்திகவாதிகள் ஆத்திகவாதிகளான சுவாரஸ்யமான தகவல்கள்… என்று நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் சிறு கட்டுரைகளாகவும், துணுக்குகளாகவும், எளிய தமிழில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பக்கத்தைத் திருப்பினாலும் சுவை மிக்க, கேட்டறியாத, பழைய தகவல்களை இந்நூலில் படித்து ரசிக்கலாம். -பரக்கத். நன்றி; துக்ளக், 24/6/2015.