கம்பனில் சட்டமும் நீதியும்
கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ.
To buy this Tamil book : http://www.nhm.in/shop/1000000022780.html ஏவி. எம். அறக்கட்டளை சார்பில் கம்பன் விழாவை ஏவி.எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014 ஜுலை மாதம் நடைபெற்ற கம்பன் விழாவில், இந்நூலாசிரியர் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே இந்நூல். சென்னை உயர் நிதிமன்றத்தின் நீதிபதியான இந்நூலாசிரியர், நீதித் துறையில் மட்டுமல்ல, இலக்கியம், இசை, ஆன்மீகம், இந்தியக் கலாச்சார மரபு, எழுத்து ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டவர். கம்பர் வாழ்ந்தது இன்றுள்ள நீதிமன்றம், சட்டம், வழக்குரைஞர் என்றெல்லாம் இல்லாத காலகட்டத்தில். அந்த நிலையில், நீதித்துறை குறித்து கம்பர் தனது படைப்பில் எப்படியெல்லாம் பதிவு செய்துள்ளார். அதற்கு அந்நாளில் அவருக்கு துணை புரிந்த நீதி நூல்கள் எவையெவை என்பனவற்றை இந்நூலாசிரியர் மிக நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளது பிரமிப்பாக உள்ளது. கருப்பு அங்கி என்பது நீதித்துறைக்கு 17ஆம் நூற்றாண்டில் உருவான உடை. ஆனால் 12-ஆம் நூற்றாண்டிலேயே கம்பர் இவ்வண்ணத்தை இத்துறைக்கு அடையாளம் காட்டியுள்ளார். இதை ஆசிரியர் கம்பரின் பாடலிலிருந்து எடுத்துக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி கம்பன் காட்டும் சட்டம், ஒழுங்கு, தடியடி, புலன் விசாரணை, பாதுகாப்புச் சட்டம் என்று 22 தலைப்புகளில் வரும் கட்டுரைகள் இலக்கிய ரசனையுடன் கூறப்பட்டுள்ளன. கம்பனை புதுமையான கோணத்தில், புதுமையான சிந்தனையுடன் நீதிபதி ராம சுப்ரமணியன் தனது உரையில் ஆய்வு செய்திருப்பதை இந்நூல் மூலம் உணர முடிகிறது. -பரக்கத் நன்றி: துக்ளக், 21/1/2015.