செம்பியன்மாதேவி கலைக்கோயில்
செம்பியன்மாதேவி கலைக்கோயில், கோ. எழில் ஆதிரை, இயல், விலை 70ரூ.
இன்றும் வாழும் மாதேவி! பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பு, உச்சரிக்கும்போதே உள்ளம் பரவசமடையும் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனின் மனைவியாக, உத்தம சோழனின் தாயாக, முதலாம் இராசராச சோழனின் பாட்டியாக, பராந்தகன், சுந்தரசோழனின், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசோழன், முதலாம் இராசராசன் ஆகிய ஆறு மன்னர்களின் ஆட்சிவரை இறைப் பணியிலும் கலைப்பணியிலும் ஈடுபட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்றவர் செம்பியன் மாதேவி. அவரின் முழு வாழ்க்கை வரலாற்றை ‘செம்பியன் மாதேவி கலைக்கோயில்’ என்ற புத்தகத்தில் முனைவர் கோ. எழில் ஆதிரை மிக அழகான நடையில் கல்வெட்டு ஆதாரங்களுடன் அந்தந்த இடங்களுக்கே சென்று ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அவர் கண்ட ஆய்வில் “கண்டராதித்தனுக்கு இரு மனைவியர். அவ்விருவருள் முதல் மனைவியாகிய வீரநாராயணி என்பவர் கண்டராதித்தச் சோழன் முடிசூடி ஆட்சி செய்வதற்கு முன்னரே இறந்தாள். செம்பியன் மாதேவி என்பவரே அம்மன்னரின் இளைய தேவியாயாவர். தம் கணவன் இறந்த பின்னர் கி.பி. 1001ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்தார் என்பது விருத்தாசலம், திருவக்கரை ஊர்களிலுள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. அத்தகைய பெண்ணரசி தம் வாழ்நாளில் தமிழ்நாட்டிலுள்ள சிவன் கோவில்களுக்குப் பல அறக்கொடைகளை வாங்கியுள்ளார்” என்று தருகிறார். மேலும், செம்பியன் மாதேவி கேட்டை நட்சத்திரத்தில், மழவர் குலத்தில் தோன்றியவர் என்பதையும் சிவத்தொண்டில் ஈடுபட்டதனால் மாதேவடிகள் என்று மரியாதையோடு அழைக்கப்பட்டார் என்பதையும் கல்வெட்டுச் சான்றுகளுடன் விளக்குகிறார். அரசரும் அரசியரும் பொதுமக்களும் போற்றும்படித் திகழ்ந்த செம்பியன் மாதேவி நினைவாகத் தமிழகத்தின் பல ஊர்கள், ஆறுகள், மண்டபங்கள், கால்வாய்கள், சேரிகள், செப்புத் திருமேனிகள், சிலைகள் அமைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள செம்பியன் மாதேவி, அரியலூர் வட்டத்தில் திருமழப்பாடிக்கு அருகில் உள்ள செம்பியன் மாதேவிக்குடி, (செப்பியக்குடி) சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள செம்பகமாதேவி ஆகியனவும், மன்னார்குடி அருகிலுள்ள செம்பியன் மாதேவி என்ற ஊரும், உளுந்தூர்பேட்டை வட்டத்திலுள்ள செம்பியன் மாதேவி ஊரும், செம்பியன் மாதேவி நினைவால் எழுந்த சில ஊர்களாகும் என்று பட்டியலிடுகிறார் எழில் ஆதிரை. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திரப் படைப்பு, செம்பியன் மாதேவி வாழ்ந்த, இன்றும் மக்கள் மனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் படைப்பு என்பதற்கு ஆசிரியர் காட்டும் சான்று மெய்சிலிர்க்க வைக்கிறது. “இவ்வரசி தம் பெயரின் முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1001ல் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவக்கரை கோயிலைக் கருங்கற்கோயிலாக அமைத்தமையே தம் வாழ்நாளின் இறுதியில் செய்த திருப்பணி என்று தெரிகிறது. திருமழப்படிக்கு அருகிலுள்ள செம்பியக்குடியில் ஊரார்கள் இன்றும் தங்கள் ஊர் செம்பியன்மாதேவி பிறந்த ஊர் என்ற பெருமையோடு செம்பியன் மாதேவியார் பிறந்த நாளன்று கைலாசநாதர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள செம்பியன் மாதேவி கற்சிலைக்குப் புதிய சேலைகள் மற்றும் பொருள்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று செம்பியன் மாதேவி சிலைக்குச் சீதனமாக அளித்து மகிழ்கின்றனர்.” செம்பியன் மாதேவி திருப்பணி செய்த கோயில் கல்வெட்டுகளும் அவரது எண்பது ஆண்டுகால முழுமையான பதிவையும் துல்லியமாகக் காட்டுகிறது இந்நூல். -பொன். மூர்த்தி. நன்றி: கல்கி.12/7/2015.