திருவருட்பா
திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருஅருட்பா எளியவுரை, ஆறு திருமுறைகள் மற்றும் திருவருட்பா உரைநடை, புலவர் அடியன் மணிவாசகன், முதல் திருமுறை, பக். 760, விலை 400ரூ, இரண்டாம் திருமுறை, பக். 715, விலை 360ரூ, மூன்று – நான்காம் திருமுறைகள், பக். 352, விலை 200ரூ, ஐந்தாம் திருமுறை, பக். 560, விலை 280ரூ, ஆறாம் திருமுறை, தொகுதி 1, பக். 947, விலை 480ரூ, ஆறாம் திருமுறை தொகுதி 2, பக். 1122, விலை 550ரூ, திவட்பா உரை நடை, பக். 577, விலை 330ரூ, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
வள்ளலார் அருளிய திருவருட்பாவின் ஆறு திருமுறைகளுக்கும் தனித்தனியாக எளிய, விரிவான விளக்கவுரை நூல்களையும், திருவருட்பா உரைநடை நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரயர். வள்ளலாரின் பாடல்கள் மிகவும் எளிமையானவை. வள்ளலார் இறைவனை ஜோதி ரூபமாகக் கண்டவர். ஜீவகாருண்யம், கொல்லாமை, புலால் மறுத்தல், பசிப்பிணி போக்குதல், தன்னைப் போல பிற உயிர்களையும் நினைத்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்றவற்றை வலியுறுத்தி, சமரச சுத்த சன்மார்க்க நெறியில் நின்றவர். வள்ளலாரின் வழிபடு நூல் – வழிகாட்டி நூல் திருவாசகமே என்பதால், அவருடைய பல பாடல்களில் திருவாசகப் பதிகத் தலைப்புபகள், பாடல்கள் போன்றவற்றின் தாக்கம் அதிகம் காணப்படுவதில் வியப்பொன்றுமில்லை. முதல் திருமுறையின் தொடக்கத்திலேயே திருவாசக – சிவபுராண திருவடிப் புகழ்ச்சியை நினைவுபடுத்துவது போல திருவடிப்புகழ்ச்சியில் தொடங்கியிருக்கிறார். இரண்டாம் திருமுறையில் புண்ணிய விளக்கம் தொடங்கி தலைமகளின் முன்ன முடிப்பு ஆகிய 113 தனித்தனித் தலைப்புகளில் அடங்கிய பதிகங்களின் தொகுப்பு இடம் பெற்றுள்ளன. இவ்விரண்டாம் திருமுறையில் தமிழ் அக இலக்கிய – இலக்கண மரபுவழி தலைவன் – தலைவி (நாயகன் – நாயகி) பாவத்தில் அமைந்த சில பாடல்கள் மூலம் அகமாந்தர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதேபோல மூன்றாம், ஆறாம் திருமுறைகளிலும் இவ்வகப் பொருள் மரபைக் காண முடிகிறது. நான்காம் திருமுறையில் சைவ சமயக் குரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் பாடிப் பரவியுள்ளார். ஐந்தாம் திருமுறையில், பதிகம், மாலை, பஞ்சகம், விருத்தம், கும்மி, கண்ணி, அலங்காரம், அட்டகம் முதலிய சிற்றிலக்கிய வகைகளைப் பயன்படுதிப் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வள்ளலார் பாடல்களில் சைவ சித்தாந்தத் தெளிவையும் காண முடிகிறது. கடவுளை அன்பு மயமாக – அருள் மயமாக அனுபவித்த வள்ளலார், தனக்கும் இறைவனுக்கும் இடைவெளி இல்லாத நிலையை ஆன்ம தரிசனம் பகுதியில் உள்ள (நினைத்த போதெல்லாம்) பாடல் வழியாக விளக்கியுள்ளார். இது, இறைவனுடன் அவர் இரண்டறக் கலந்து ஜீவன் முக்தர் நிலையை எய்தியதை உணர்த்துகிறது. ஆறாம் திருமுறையில் அமைந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் இரண்டு தொகுதிகளும் அனைத்திற்கும் மகுடமாகத் திகழ்கின்றன. உரைநடைப் பகுதியில் உரைநடை நூல்கள், வியாக்கியானங்கள், மருத்துவக் குறிப்புகள், உபதேசங்கள், திருமுகங்கள் (கடிதங்கள்), அழைப்பிதழ்கள், அறிவிப்புகள், விண்ணப்பங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. அவர் அருளியவற்றை எல்லாம் முழுமையாகப் படிக்க எத்தனை பிறவிகள் எடுத்தாலும் போதாது என்பதை மெய்பிக்கும் அருமையான தொகுப்புகள். நன்றி: தினமணி, 6/7/2015.