லோன் உல்ப் அன்ட் கப்

லோன் உல்ப் அன்ட் கப், கசோ, டார்க் வின்ட் மங்காய் பதிப்பகம், ஓவியம் கொசாகி.

கதை சொல்லும் ஓவியங்கள் ஜப்பானிய சாமுராய் இனத்தின், வீர தீரத்தை சித்தரிக்கும், லோன் உல்ப் அன்ட் கப் என்ற படக்கதை (காமிக்ஸ்) தொடரின், பிளாக் வின்ட் என்ற பகுதியை சமீபத்தில் படித்தேன். டார்க் வின்ட் மாங்காய் என்ற ஜப்பானிய பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் ஓவியங்களை, கொசாகி வரைந்துள்ளார். கதையை கசோ எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் உள்ள இந்தப் படக்கதை, மண் மற்றும் பெண்ணுக்காக சாமுராய் இனத்தினர் நடத்தும் வீர, தீரங்களை சித்தரிக்கிறது. நூறு பக்க படக்கதையில், சொல்லாடல் என்பது அதிகபட்சம், 10 பக்கங்களைத் தாண்டாது. முழுக்க முபக்க படங்கள்தான் இந்த கதையின் நாயகன். தற்போதுள்ள கணினிமய உலகில், வண்ணப் படங்களைக் கொண்டு தான், படக் கதைகளை வரைகின்றனர். ஆனால் இந்த படங்கள் கறுப்பு, வெள்ளையில் உள்ளன. ஒரு பக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட, படக்கதைப் பெட்டிகள் இருந்தாலும், அவற்றின் கறுப்பு வண்ணம் அனைத்துப் பெட்டிகளிலும் ஒரேமாதிரி இருக்கிறது. இதனால், நாம் எந்தப் பெட்டியில் உள்ள சொல்லாடலைப் படிக்கிறோமோ, அது மட்டுமே நம்முன் இருக்கும். மற்ற பெட்டி சொல்லாடங்கள் நம் கண்ணை உறுத்தாது. இதுவே, இந்த ஓவியங்களின் சிறப்பு. ஒரு ஓவியம், அதற்கு சொல்லாடல் என்பதே படக்கதைகளில் எப்போதும் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் லோன் உல்ப் அன்ட் கப் இந்த முறையை உடைத்து, தனக்கென தனி உத்தியைக் கையாண்டுள்ளது. சில பக்கங்களில் எந்த உரையாடலும் இருக்காது. ஓவியங்கள் மட்டுமே கதை சொல்லும். இந்த ஓவியங்கள், சண்டையின்போது ஏற்படும் ஒலியைக் கூட அற்புதமாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். மழை பெய்யும் ஓவியங்களில், மழையின் சத்தத்தை உணரும் வகையில், காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். சினிமாவில் ஒரு காட்சியை எப்படி காட்சிப் படுத்த முனைகிறோமோ, அதுபோலவே இந்த படக்கதையும் உள்ளது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், மரம், மழை, மேகம், கதாபாத்திரங்களின் வடிவங்கள் படிப்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இதனால் எத்தனை முறை படித்தாலும் சலிப்பைத் தராமல் படிக்கத் தூண்டுகிறது. -சிம்புதேவன் (திரைப்பட இயக்குநர்) நன்றி: தினமலர், 11/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *