செல்லுலாயிட் சித்திரங்கள்

செல்லுலாயிட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 207, விலை 100ரூ.

சிவாஜிக்கு பதிலாக எம்.ஜி.ஆர். பத்தாண்டு காலத்தில், ஆயிரம் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறார் தமிழ்மகன். அடுத்த எட்டு ஆண்டுகளில் இருபதுக்கும் குறைவாம். இரண்டும் கடந்த சமஸ்திதியில் வெளிவந்திருக்கிறது அவருடைய இந்த நூல். சின்னச் சின்னக் கட்டுரைகள் சிறுகதை போன்ற முத்தாய்ப்போடு. உருக்கம் அல்லது கிறக்கம் தரும் தகவல்கள், பனி மூட்டம் போன்ற மனித நேயங்கள், விடையில்லாத கேள்விகள், கிளாமரில் துவங்கி மதமாற்றம் வரை போன நடிகையர் என்று சினிமா வேகத்தில் நிறைய திருப்பங்கள் உண்டு. லஞ்ச ஒழிப்பை வலியுறுத்திய, இந்தியன் திரைப்படத்தின் டிக்கெட் ப்ளாக்கில் விற்கப்பட்டது என்ற ஏகடியமும் உள்ளது. இத்தனை இருந்தாலும் வாசகர்களுக்காக ஒன்றே ஒன்று… அவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி, கவிஞர். இந்திய அரசின் திரைப்பட விருதுக் குழுவில் உறுப்பினராக இருந்தார் (1972). ‘பாரத் விருதை யாருக்குக் கொடுக்கலாம் என்று குழுவில் ஆலோசிக்கப்பட்டது. ‘எம்.ஜி.ஆருக்குத் தான் தரணும்’ என்று அம்மையார் அடித்துப் பேசிவிட்டார். சிவாஜி பெயரைச் சொல்லலாமே என்று யோசித்த மற்றவர்கள் பேசாமல் இருந்துவிட்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன், ‘சிவாஜி சாரை சொல்லியிருக்கலாமே’ என்று ஒருவர் கேட்டிருக்கிறார். ‘சிவாஜியைத் தானே சொன்னேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘இல்லையே! நீங்கள் எம்.ஜி.ஆர். என்றுதானே சொன்னீர்கள்’ என்றனர், மற்றவர்கள். ‘அடடே! வாய் தவறி சொல்லிவிட்டேன். சிவாஜிக்கு தான் கொடுக்க வேண்டும்’ என்றார் அந்தப் பெண்மணி. மீண்டும் குழுவைக் கூட்டி, விஷயத்தைச் சரி செய்ய முடியுமா என்பதில் தயக்கம் இருந்தது. அதை அப்படியே விட்டுவிட்டனர். சிவாஜிக்கு பதிலாக எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது கிடைத்தது இப்படித்தான் (பக். 205). -சுப்பு. நன்றி: தினமலர், 11/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *