தேசம் மறந்த ஆளுமைகள்

தேசம் மறந்த ஆளுமைகள், ராபியா குமாரன், தூண்டில் பதிப்பகம், திருச்சி, விலை 100ரூ.

200 ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, எத்தனை தியாகங்களைப் புரிந்து இந்த சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம்கள் இப்போராட்டத்திற்கு எப்படி முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ‘தேசம் மறைந்த அரசர்’ என்ற முதல் கட்டுரையில் இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பஹதூர் ஷாவும், அவரது குடும்பத்தினரும் 1850-களில் ஆங்கிலேயரால் எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்திகள் நம் கண்களைக் கலங்கச் செய்கிறது. ஆங்கிலேயர்களின் அடக்கு முறையால், அவர்களின் மொழியாகிய ஆங்கிலத்தை படிப்பதே ‘ஹராம்’ என்ற மனநிலைக்கு அனைத்து முஸ்லிம்களும் வந்து விட்டபோது, ‘இஸ்லாம் எந்தவொரு மொழிக்கும் எதிரானது அல்ல. முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது அவர்கள் வளர்ச்சிக்கு நல்லது’ என்று கூறியதற்காக, மார்கக் அறிஞர்களால் ‘காஃபீர்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் சர்.சையது அஹமதுகான் என்ற மாபெரும் கல்வியாளர். இவர் தமது சமுதாயத்தினரின் விமர்சனங்களையும் தாங்கி, இந்திய விடுதலைக்கு மட்டுமின்றி, இந்திய நவீன அறிவியல் கல்வி வளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் போராடினார் என்பதை ‘தேசம் மறந்த கல்வியாளர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான், திப்பு சுல்தான், ஹைதர் அலி, கவி அல்லாமா இக்பால் போன்ற ஆளுமைகளைப் பற்றியும் இந்நூலில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. -பரக்கத் நன்றி: துக்ளக், 7/10/2015.

Leave a Reply

Your email address will not be published.