பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும்
பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும், மு. இரமேஷ், இராசகுணா பதிப்பகம், பக். 175, விலை 130ரூ.
மேலைத் திறனாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி திறனாய்வு நூல்களைப் படைத்துவரும் நூலாசிரியரின் இன்னொரு திறனாய்வுப் படைப்புதான் இது. அகம், புறம் பற்றிய கருத்துருவாக்கத்தில் இணைவும் இயைபும் என்ற தலைப்பில் அடையாள அரசியல் பேசப்படுகிறது. புறானனூற்றை முன்வைத்து தொல் தமிழ் சமூகங்களும் சமயச் சொல்லாடல்களும் எப்படி இருந்தன என்பதை விளக்கியுள்ளார். அகமரபில் முருகன் பற்றிய விளக்கங்கள், அதாவது சங்க இலக்கியங்களில் முருகன் தொடர்பான குறிப்புகள் பல, சிந்துவெளிப் பண்பாட்டு அகழ்வாய்வில் உள்ளன என்பதை அஸ்கோ பர்ப்போலாவின் சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார். தொல்காப்பியத்தில் இடம்பெறும் முன்னம் – முன்னக் குறிப்பு பற்றிய அலசல், அந்த முன்னம் மேலைநாட்டு வாசிப்பு மற்றும் கோட்பாடுகளுடன் பேசப்பட்டு முன்னம் என்பது வடிவத்தைச் சார்ந்ததா, உள்ளடக்கத்தைச் சார்ந்ததா, வெளியீட்டுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்ததா என்பதை திறனாய்வு செய்துள்ளார். உருவவியல் நோக்கில் கலித்தொகை, சங்க இலக்கியங்களில் கூற்றுவனின் பங்கு, புறநானூற்றில் சாதியச் சொல்லாடல்கள், சங்க அகப்பாடல்களில் நொதுமலர் தொடர்பான சொற்கள் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கை – இப்படி திறனாய்வு நோக்கில் உருவாக்கப்பட்ட நூல்தான் இது. நன்றி: தினமணி, 5/10/2015.