சாவித்திரி கலைகளின் ஓவியம்
சாவித்திரி கலைகளின் ஓவியம், மு.ஞா.செ. இன்பா, தோழமை வெளியீடு, சென்னை, பக். 272, விலை 250ரூ.
நடிகையர் திலகம் சாவித்திரி, தன்னைப் பற்றி ஒரு சுயசரிதை நூல் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுபோல உள்ளது இந்நூல். சாவித்திரியின் மரணப்படுக்கையில் தொடங்கி, பின்னர் பின்னோக்கிச் சென்று அவருடைய வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் திரைக்கதையைப் போல பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாவித்திரியின் தேச பக்தி, தயாள குணம், வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு, நிர்வாத் திறன், நடிப்புத் திறன், இயக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சாவித்திரி நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்வரிகளின் தலைப்பிலேயே 29 அத்தியாயங்களில் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. சாவித்திரியின் திரை வாழ்க்கை குறித்து பல தகவல்கள் இருந்தாலும் புத்தகத்தின் அடிநாதமாகத் திகழுவது சாவித்திரி – ஜெமினி கணேசன் இடையேயான ஆத்மார்த்தமான காதல்தான். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆச்சரியமூட்டும் அரிய தகவல்களைப் படித்து முடிக்கும்போது தோன்றியது.. ‘ஒரே நிலவுதான் உல்கில் உள்ள எல்லா குளங்களிலும் தனித்தனியாக மிதந்து கொண்டிருக்கிறது’ என்கிற ஜென் பழமொழிதான். ஒரே சாவித்திரிதான்… ஆனால் எத்தனை படங்களில் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்? அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட? நன்றி: தினமணி, 5/10/2015.