தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன், ஆலன் ரமோன் கிளின்ட்டன்.

மவுனப் படங்களின் சகாப்தம் சமீபத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்த அற்புதமான நூல், பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆலன் ரமோன் கிளின்ட்டன் என்பவர் எழுதிய ‘தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்!’ கடந்த 1920களில் அமெரிக்காவின் மவுனப் படங்கள், உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பார்க்கப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்ற முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கீட்டன். உலகப் போரால் தங்களது வாழ்க்கையை இழந்து வெறுப்பிலும் வேதனையிலும் விரக்தியிலுமாக நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் உணர்வுகளை, இருண்மையான நகைச்சுவையை நோக்கி திசை திருப்பியவர் அவர். மக்கள் அவரது சேட்டைகளையும் அவரது உடல் மொழியையும் பெரும் ஆரவாரத்துடன் ரசிக்க துவங்கினர். அவர்களை, வேதனை கலந்த வாழ்வியலில் இருந்து மீட்டெடுத்து, கொண்டாட்டமான மனநிலைகளை ஏற்படுத்தினார் கீட்டன். அவரது கலை வாழ்வியல், ‘வாடுவில்லி’ என்ற கலை மரபிலிருந்து துவங்குகிறது. இந்தக் கலைவடிவம் கொஞ்சம் நாடகத் தன்மையும், கொஞ்சம் நாட்டியமும், கொஞ்சம் மேஜிக் காட்சிகளும், அதிகளவில் கோமாளித் தனங்களும் கதம்பமாக இணைந்து, தோற்றம் கொள்ளும் ஒரு வடிவம். நம் ஊர் தெருக்கூத்தைப் போன்றது. தற்போது சென்னையில் நடக்கும், 13வது உலகத் திரைப்பட விழாவில் பஸ்டர் கீட்டனுக்காக சிறப்புத் திரைக் காட்சிகள் நடக்கின்றன. அவரது நூற்றாண்டை நினைவுகூரும் விததில் நடக்கும் இந்தத் திரைக் காட்சிகளில் அவரது புகழ் பெற்ற முக்கியமான திரைப்படங்களை திரையிட உள்ளன. நம்முடைய இருண்மையான வாழ்வியலை எள்ளல் கலந்த நகைச்சுவையாக வாழ்வின் கொண்டாட்டமான தருணங்களாக மாற்றிய கீட்டனை திரைப்படங்களின் வாயிலாக மட்டுமல்லாது இந்த நூலிலும் நாம் நினைவு கூர்வோம். -புல்வெளி காமராசன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நன்றி: தினமலர், 10/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *