நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 208, விலை 90ரூ.

தாகூருக்கு பாரதியை தெரியுமா? தமிழ்க் கவிதைகளிலும், கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. அய்யர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ. எனும் இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் பெ.சு.மணி. தாகூரின் கவிதைகள், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும், அவற்றின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதால் தமிழ் வாசகர்கள் பயன்பெறுவர். தாகூர் பற்றி பாரதியார், 1921, ஆக.25ம் தேதி, எழுதியுள்ள இறுதிக் கட்டுரையை முழுமையாகத் தருகிறது இந்த நூல். தாகூரைப் பாரதியார் அறிந்திருந்த அளவிற்குப் பாரதியை தாகூர் அறிந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். தாகூருக்கு நோபல் பரிசு பெற்றுத்தந்த, ‘கீதாஞ்சலி’ நூலில் அவர் வங்கத்தில் எழுதிய கீதாஞ்சலி நூலில் உள்ள பாடல்கள் மட்டும் அல்லாமல், அவரது வேறு பாடல்களும் சேர்த்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்ற செய்தியையும் அறிந்து கொள்ள முடிகிறது. கார்டனர் என்ற பெயரில் தாகூர் எழுதிய கவிதையை, விபுலானந்த அடிகள், ‘பூஞ்சோலைக் காவலன்’ எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. தாகூர், 1919ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைச் சுதேசமித்திரன் வெளியிட்டுள்ளது என்பதையும், 2,230 பாடல்களை வங்க மொழியில் தாகூர் பாடியுள்ளார் எனும் தகவலையும் தந்துள்ளார் பெ.சு.மணி. புத்தரின் சீடர்களில் ஒருவரான உபகுப்தரின் வரலாற்றைத் தாகூர் நாடகம் ஆக்கியுள்ளார் என்பதும், அதைத் த.நா.குமாரசுவாமி தமிழாக்கம் செய்திருப்பதும் முதலான பல தாகூர் பற்றிய தகவல்களை நமக்கு தரும் சுரங்கமாக இந்த நூல் விளங்குகிறது. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 10/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *