நம்மோடுதான் பேசுகிறார்கள்

நம்மோடுதான் பேசுகிறார்கள், சீனிவாசன் – பாலசுப்ரமணியன், வம்சி புக்ஸ், விலை 200ரூ.

மொழி என்பது ஒரு குழுவின் அலங்காரம் மொழியை ஊமையாக்கும் ஓவியம் ஓவியத்தைப் பேச வைக்கும் மொழி -இது எனது ஒரு கவிதை. இந்தக் கவிதைக் கருவுக்குக் காரணமாக இருந்தவை நண்பர் சீனிவாசனின் ஓவியங்கள். அவர் ஒரு சிறந்த ஓவியர். சுதந்திரமான தன் மனதை இன்னும் சுதந்திரமாகக் கித்தானில் பறக்க விடுபவை அவரது வண்ணங்களும், கோடுகளும். ஓவியர் சினிவாசனும் அவரது சக ஓவியரும் நண்பருமான பாலசுப்ரமணியமும் ஓவியம் சார்ந்து உரையாடிப் பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள் ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’ நூலில் வெளிப்பட்டிருக்கிறது. ‘ஒரு கோயில் என்பது அன்றைய மக்கள் தொகைக் கணக்கீட்டின் அடிப்படையிலான வடிவமும் பரப்பும் கெண்டது. சமூகத்திற்கான கல்வி, நீதி பரிபாலனம், பொருளாதாரம், கரை, அரசியல் போன்றவை நிகழ்ந்த இடம் கோயில்’ என்கிற அழுத்தமான கருத்து முதல், ஒரு சிறந்த கலைஞன் அவனது சுதந்திர வளர்ப்பிலிருந்தே உருவாக்கப்படுகிறான் என்பதை, தன் தந்தை தன்னை எப்படி வளர்த்தார் என்று ஆதுரம் பொங்கச் சொல்லுவது வரை பல படி நிலைகளில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள், பார்வைகள் மூலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது, ‘திருத்தமாகச் செய்யப்படும் எந்த ஒருவேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் அது ஓவியம்.’ ‘மொழி என்பது ஒரு குழுவின் அலங்காரம்’ , ‘பார்வையாளன் மனதில் சிந்தனையைத் தூண்டுபவன், படைப்பாளன், பார்வையாளன் மனதில் வெறும் சந்தோஷத்தைத் தூண்டுபவன் ஓவியன்.’ என்று படைப்பாளனுக்கும் ஒரு சித்திரக்காரனுக்கும் இருக்கும் மெல்லிய திரைச்சீலையை விலக்கிக் காண்பிக்கிற பல நல்ல மேற்கோள்கள் போன்ற அனுபவ வரிகளும், ‘ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சிக்கிறதுக்கும் மறந்து போறதுக்கும் நடுவே என்ன நிகழ்கிறது என்று யோசித்தால் அப்ஸ்ட்ராக்ட ஓவியம் பற்றிய ஐயப்பாடுகளைத் தாண்டிவிடலாம்’ என்பதுபோல வசீகரம் மிக்க குறிப்புகளும் நிறையவே உள்ளன. – கலாப்பிரியா. நன்றி: அந்திமழை1/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *