ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம்
ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம், உரையாசிரியர் வீடுர் கு. அப்பாசாமி சாஸ்திரியார், ஜைன இளைஞர் மன்றம், பக். 1008, விலை 600ரூ.
தமிழில் இயற்றப்பட்ட பழைமையான காவியங்களுள் ஒன்று ஸ்ரீவாமன முனிவரால் இயற்றப்பட்ட இந்த மேருமந்தர புராணம். இந்நூல் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கூடும் என்கிறது பதிப்புரைக் குறிப்பு. இப்புராணம், 1406 செய்யுள்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் கதைச் சுருக்கமும் தரப்பட்டிருக்கிறது. அருக நெறியைப் பரப்புவதற்காக உருவான காவியம் இது. ஸ்ரீ புராணத்தில் வரும் மேரு, மந்தரர் ஆகிய இரு கணதரர்களின் முற்பவங்களின் வரலாற்றினை விவரிக்கிறது (இவர்கள் பதின்மூன்றாம் தீர்த்தங்கரர் ஸ்ரீவிமலநாதரின் கணதரர்கள்). மேலும் சைன தத்துவம், வினைக்கோட்பாடு, புவியியல், ஆன்மிகம், ஆலய நிர்மாணம், ஆகமம், கட்டக்கலை, சமவசரணம், முக்தி ஆகியவற்றைப் பற்றியும் விளக்கமளிக்கும் விரிவான புராணம் இது. இந்நூல் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 1918ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக அச்சிடப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 1989, 1993-94, 2009, 2014 எனப் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இப்புராணம் சைன அறிஞர்களால் பெரிதும் போற்றிப் பயிலப்படுகிறது. சைனர்களுக்குரிய பழமையான தகவல் களஞ்சியங்களுள் இம்மேருமந்திர புராணமும் அடங்கும். நன்றி: தினமணி, 4/1/2016.