சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்
சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர் பா. வீரமணி, சாகித்திய அகாதெமி, பக். 288, விலை 155ரூ.
வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி, பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர், பொதுவுடைமைச் சிந்தனை உடைய போராளி எனப் பன்முகத்தன்மை கொண்ட சிங்காரவேலர், குடி அரசு, புதுவை முரசு, புரட்சி, புதுஉலகம் முதலிய இதழ்களில் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட 43 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எனினும் குடி அரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் அதிக அளவில் தொகுக்கப்பட்டு உள்ளன. கடவுள், மதநம்பிக்கை, சாதிப்பற்று, பய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, அறிவியல் அடிப்படையிலான கருத்துகளை மிகத் தெளிவாகவும், துணிவாகவும் சிங்காரவேலர் இக்கட்டுரைகளில் முன் வைத்திருக்கிறார். கடவுள் தோன்றியவிதம், உயிர் என்று எதைக் கூறுகிறோம்? மனம் என்று தனியே உண்டா? மரணத்துக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்க்கை உண்டா? கற்பு எதற்காக முன்பு வலியுறுத்தப்பட்டது? நவீன காலத்தில் கற்பு ஏன் அவசியம்? பெண்களின் நிலை அன்றும், இன்றும் எப்படி உள்ளது? பெண்கள் உரிமையோடு வாழ என்ன செய்ய வேண்டும்? குழந்தை வளர்ப்பில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை? பக்தியால்தான் சமூகத்தில் ஒழுக்கம், பிறருக்குத் தீங்கு செய்யாமை எல்லாம் உள்ளதா? ஏசு எவ்வாறு பொதுவுடமைவாதியாக இருந்தார்? என பல்வேறு விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, கணினி, இணையதளம் ஆகிய தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில் உலக அளவிலான புதிய அறிவு வெளியில் சிங்காரவேலர் எவ்வாறு நடை பயின்றார்? என்பது வியப்புக்குரிய ஒன்று. பழைய சிந்தனைகளில் உழன்று கொண்டிருக்க விரும்பாமல், உண்மைகளைத் தேடிக்கொண்டிருப்போருக்குச் சரியான வழியில் சிந்திக்க உதவும் நூல். நன்றி: தினமணி, 14/3/2016.