விடுதலை
விடுதலை, சமன் நாஹல், தமிழில் பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதெமி, பக். 384, விலை 200ரூ.
புகழ்பெற்ற எழுத்தாளர் சமன் நாஹல், ‘ஆஸாதி’ என்ற பெயரில் எழுதிய நாவலின் தமிழ் வடிவம். சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசப் பிரிவினையின்போதும் உருவான அரசியல் மாற்றங்களைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இந்த நாவல், சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
நாட்டை பிளவுபடுத்தியதால் விளைந்த ரணங்களையும் வேதனைகளையும் கதையினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் லாலா கன்ஷிராம் என்ற தானிய வியாபாரியைச் சுற்றி கதைக் களம் நகர்கிறது. தேசப் பிரிவினைக்குப் பிறகு அவர், தனது குடும்பத்தினரை இழந்து சொந்த நாட்டிலேயே அகதியாக மாறிய நிலைமையை நூலாசிரியர் அரசியல் பின்னணியுடன் எடுத்துரைத்துள்ளார்.
பாகிஸ்தான் தனி நாடாக உருவான பிறகு, அங்கிருந்து தில்லியில் வாழ விரும்பி வந்தவர்கள் ஊடுருவல்காரர்களைபோல நடத்தப்பட்டது, பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டது, மதரீதியான மோதல்களில் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டது என கடந்த காலத்தின் கசப்பான சில உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கங்கையாறு, காவிரிவாறு, யமுனையாறு ஆகியவற்றுடன் சேர்ந்து பிரிவினையின்போது ரத்த ஆறும் ஓடியதுதான் நம் தேசத்தின் வரலாறு என்பதைப் பதிவு செய்யும் மகத்தான நாவல், விடுதலை. எளிமையான தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
நன்றி: தினமணி, 4/4/2016.