டோக்கன் நம்பர் – 18
டோக்கன் நம்பர் – 18, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 100ரூ.
திருச்சி மாவட்டத்தில், தனித் திறமையுடன் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் 10பேரின் மிகச் சிறந்த சிறுகதைகள் தலா இரண்டாக மொத்தம் 20 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதைகயும் ஒவ்வொரு தளத்தில் பயணிக்கின்றன. இவை கதைகள் என்பதைவிட மனித வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்று கூறுவது மிகைப் பொருத்தமானது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதை தொடக்கத்திலும், அவர்களைப் பற்றிய சிறப்புகள் சிறு குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் கதையான ‘பொய்யுறவுப் பாலங்கள்’ இம்மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரான மழபாடி ராஜாராமின் கதையாகும். இக்கதையின் கரு, பலராலும் புகழப்படும் ஒரு சாமானியரின் பெருமை, ஊதிய பலூனைப் போன்றது. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற உலக நடப்பை எடுத்துக் காட்டுகிறது. அதேபோல இரா. சின்னத்துரையின் ‘கரையைத் தேடும் ஓடங்கள்’, ‘நூறாவது கடிதம்’ ஆகிய இரண்டு கதைகளும் காதல் உணர்வையும், அது வெற்றி பெறும் விதத்தையும் அழகாகச் சொல்கிறது.
அடுத்து மும்தாஜ் பேகம் எழுதிய ‘முத்தழகியின் மகிழ்ச்சி’ மற்றும் ‘தாயினும் உயர்ந்த தாய்’ ஆகிய கதைகள் ஏழ்மையின் கொடுமையைச் சித்தரித்தாலும், அந்த ஏழ்மையையும் சகித்துக்கொண்டு, நற்செயல்களோடு வாழும் உயர்ந்த உள்ளங்களை படம்பிடித்துக் காட்டுகிறது.
இப்படி அனைத்துக் கதைகளும் எதார்த்தத்தைப் பிரதிபலித்து, நற்சிந்தனையைத் தூண்டும் கதைகளாக உள்ளது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 27/4/2016.