சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம்
சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம், தொகுப்பு: அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலை மருத்துவர் குழு, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 344, விலை ரூ.200.
இந்நூலில் சித்த மருத்துவத்துக்கான களிம்புகள், லேகியங்கள், கேப்சூல்கள், டானிக்குகள், சர்பத்கள், சூரணங்கள், பற்பங்கள் மற்றும் பல்பொடி, சாக்லேட், மாத்திரைகள் செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
சித்தர்களான போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலியவர்களைத் தவிர, பெரும்பாலான சித்தர்கள் தமிழர்களே. ஆதலால், இச்சித்த வைத்தியம் தமிழ்நாட்டுக்கே உரியதென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதனால்தான் அவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் தமிழ்ச் செய்யுளில் இயற்றப்பட்டுள்ளன.
மேலும் சித்த மருத்துவ முறை, உலக நன்மைக்காக எழுதப்பட்ட காரணத்தால்
இம்மருத்துவத்தை வியாபாரமாக அல்லது பணத்திற்காக செய்யக்கூடாது. அப்படி விதித்த விதிகளை மீறி நடந்தால் சித்தர்கள் சாபம் வந்து சேருமெனக் கருதப்படும் என்றும் இந்நூலில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தில் ஆர்வமுடைய, ஈடுபாடுடையவருக்கு மட்டுமே இந்த நூல் பெரிதும் பயனளிக்கும். சாதாரண மக்களுக்கு இதில் கூறப்பட்டுள்ள மருந்துகளைத்
தயாரிப்பதற்கான மூலிகைகள், மூலப் பொருள்களைப் பற்றிய விவரங்கள் இதுவரை கேள்விப்படாததாகவே இருக்கும். இவையெல்லாம் எங்கே கிடைக்குமோ என்ற ஒருவகை திகைப்பும் ஏற்படும்.
இருப்பினும் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்துகொள்ளவும் அதுதொடர்பான விழிப்புணர்வைப் பெறவும் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் துளியும் ஐயமில்லை.
நன்றி: தினமணி, 23/4/2016.