பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை
பொதுத்தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, விகடன் பிரசுரம், பக்.70, ரூ.65.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர்.
நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. கசக்கும் கணிதமும், அழ வைக்கும் அறிவியலும் இனிக்க, பொருள் புரிந்து படிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள், பிள்ளைகள் படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வப்போது பிள்ளைகளை மனப்பாடப் பகுதியைச் சொல்லச் சொல்லி கேட்பது, தகுதியான டியூசன்
ஆசிரியர்களை நியமிப்பது என பெற்றோர்களுக்கான பல ஆலோசனைகளையும்
எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.
தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமல்ல, திறன்களை வளர்த்துக் கொள்ளவும்தான். புத்தகம் படிப்பதை விடவும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு இல்லை என்பதை பிள்ளைகள் உணர்ந்து விட்டால் போதும் அதிக மதிப்பெண்கள் பெற என்கிறார் ஆசிரியர்.
நன்றி: தினமணி, 23/4/2016.