யோகியுடன் கொஞ்ச தூரம்
யோகியுடன் கொஞ்ச தூரம், எஸ்.பார்த்தசாரதி, நேசமுடன், சென்னை, பக். 304, விலை: ரூ.150.
இந்நூல் யோகி ராம்சுரத்குமாருடன் பழகிய பக்தர்களின் அனுபவங்கள் அத்தியாய, அத்தியாயமாக அனுபவித்து எழுதப்பட்டுள்ளது.
அவற்றிலிருந்து சில…
“யோகியுடன் இருக்கும்போது அவரிடமிருந்து ஏதோ ஒன்று கனமாக, வேகமாக, வெள்ளமாகப் பரவி அனைவரையும் ஆட்கொள்ளும். அச்சமயத்தில் உடல் செத்துவிடும், மனம் நினைவை இழக்கும். உணர்வு உணர்வற்ற நிலையை அடையும்’ என்று நூலாசிரியர் பார்த்தசாரதி தமது அனுபவத்தை சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்.
யோகி மீது ஒரு மூதாட்டி வைத்திருந்த பக்தி, 85 வயதான பக்தருக்கு அவரது விருப்பத்திற்கிணங்கி அமைதியான இறுதி முடிவை (மரண வரத்தை) அளித்த சம்பவம், மது போதையுடன் தொல்லை கொடுத்து வந்த ஒருவரின் காலில் விழுந்து “போயிட்டு வாங்க ராஜா! இந்தப் பிச்சைக்காரருக்கு வேலை இருக்கு ராஜா!’ என்று நயமுடன் பேசி அனுப்பி வைத்த அருங்குணம்… இவையெல்லாம் யோகி ராம்சுரத்குமாரின் சிறப்புக்குச் சிறு சிறு உதாரணங்கள்.
25 ஆண்டுகளுக்குப் பின்னர், வட இந்தியாவில் இருந்து வந்த தமது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தாரை சம அன்பு, சம நிலையுடன் யோகியார் நடத்திய விதம், அவர் முற்றும் துறந்த ஞானி என்பதற்கு எளிய உதாரணமாக அமைகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, யோகி சிரிக்கும்போது அங்கே யோகியைச் சுற்றி இருப்போர் ஆனந்தத்தில் திளைப்பதும், அவர் மெளனமாக இருக்கும்போது அங்கே ஒருவிதமான பேரமைதியை அனைவரும் அனுபவிப்பதும், அவர் கோபத்தில் இருக்கும்போது அனைவரும் நடுநடுங்கிப்போவதும் யோகியின் சூழலை யோகிதான் கம்பீரமாக நிர்வகிக்கிறார் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 18/4/2016.