நெல்லை நாட்டுப்புறக் கலைகள்
நெல்லை நாட்டுப்புறக் கலைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை, பக்.216, ரூ.210.
நாட்டுப்புறக் கலைகளின் பிறப்பிடம் கிராமங்கள். கிராமங்களில் நடைபெறும் விழாக்களின் ஒரு பகுதியாக நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்படுவதுண்டு. இன்று விவசாயம் நலிந்து, கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக பெரும் அளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது மண்ணில் புதைந்து கிடக்கும் பழைய வேர்களிலிருந்து கிளை பரப்பி, மலர்ந்துள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய அறிமுகமாகவும், நமது மரபை நாம் மறந்துவிடாமல் நினைவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஆலி ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி ஆட்டம், கோலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், தோல்பாவைக் கூத்து போன்ற நிகழ்த்துகலைகளைப் பற்றியும், மண், மரம், கல், உலோகம், ஓலை, மூங்கில் ஆகியவற்றால் உருவாக்கப்படும் சுடுமண் பொம்மை, சப்பரம், தேர், தெய்வச் சிலைகள், பனை ஓலைப் பொருட்கள் ஆகியவை பற்றியும் விரிவாக இந்நூல் பேசுகிறது.
ஜல்லி கட்டு, சேவல் கட்டு, சிலம்பாட்டம், பலருக்கும் தெரியாத தேங்காய்ப் போர் விளையாட்டு பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.
உருமி மேளம், நையாண்டி மேளம், செண்டை மேளம் பற்றியும் நூல் விவரிக்கிறது. நூலாசிரியரின் கடும் உழைப்பு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது.
நன்றி: தினமணி, 18/4/2016.