மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், டி.கே.இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக்.382, ரூ. 220.

முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது.
இந்தியாவின் சமூகம், கலை, மொழி, இலக்கியம், அரசியல், நிர்வாகம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட மொகலாயப் பேரரசு, கி.பி. 1526 முதல், 1857 வரை சுமார் 330 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. வடஇந்தியாவிலும், தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் பகுதிகளிலும் அவர்களது ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது.
மொகலாயர் காலக் கட்டடக் கலையின் சிறப்பை, தில்லி செங்கோட்டை, தாஜ்மகால், ஜும்மா மசூதி போன்ற இடங்களில் இன்றும் காணலாம். வாரிசுரிமைப் போர்கள், துரோகங்கள், ராஜதந்திர நடவடிக்கைகளின் கலவையாக மொகலாயப் பேரரசு இருந்ததை இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
ஆயினும், மன்னர்களைப் போற்றி எழுதப்படுவது மட்டுமல்ல வரலாறு; நடுநிலைமையுடன் கூடிய அவதானிப்புகளும், சரித்திர ஆதாரங்களைக் கூர்மையுடன் அலசி, விமர்சனப்பூர்வமாக ஆராய்வதும் முக்கியம். அத்தகைய அணுகுமுறையை இந்நூலில் காண முடியவில்லை என்பது பெரும் குறை.
மொகலாயர்களின் வரலாற்றை கதைபோல எழுதிச் செல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். தேவையான இடங்களில் பொருத்தமான படங்கள் இடம் பெற்றிருப்பதும் சிறப்பு.
நன்றி: தினமணி, 18/4/2016.