மகராஜனா இரு

மகராஜனா இரு, அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக். 292, விலை 200ரூ.

கடந்த, 1930களில், தேசியம், காந்தியம், சமுதாயப் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களைப் பற்றி, அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப, ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதினார் கல்கி. அவற்றின் தொகுப்புதான் இந்த நூல்.

அன்று பேசப்பட்ட பல பிரச்னைகள், இன்று வரை நீடிக்கின்றன என்பதே யதார்த்தம். எவரையும் புண்படுத்தா நகைச்சுவை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதை உணர, இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் பட்டதாரிகள் அல்லாதோர் நுழைய முடியாது. இந்த விவரம் தெரியாத கல்கியும் அவர் நண்பரும், அங்கு சென்றுபட்ட அவதியை, நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது முதல் கட்டுரை.

திரு.வி.க., ஆசிரியராக இருந்த ‘நவசக்தி’ இதழின் தனித்தமிழ் நடையை கிண்டலடிக்கிறார் கல்கி (பக்.8). அப்போதைய பத்திரிகைகள் ஒவ்வொன்றும், ஆங்கில சொற்களுக்கு ஒவ்வொரு மொழிபெயர்ப்பைக் கடைபிடித்தன. அவற்றை வரிசையாக கிண்டலடித்து விட்டு, இறுதியாக ஒன்று கூறுகிறார்: ‘இத்தகைய குழப்பங்கள் ஏற்படாமலிருப்பதற்குத் தமிழ்ப் பத்திரிகைகாரர்களுக்குள் ஒத்துழைப்பு வேண்டும்’ (பக். 14). இன்றைய நிலையையும் அந்த வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

-மயிலை கேசி

நன்றி: தினமலர், 10/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *