முருகன் விநாயகன்
முருகன் விநாயகன், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ.
மீண்டும் தலைதூக்கும் கலாசாரவாதம்!
தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் தளத்தில், முருகன் எனும் பிம்பம் மெல்ல கலைந்து, விநாயகர் எனும் பிம்பம் மேலெழுந்து வருவதை, பல்வேறு சான்றாதாரங்கள் மூலம், இந்த நூலில், கவுதம சித்தார்த்தன் சுட்டிக்காட்டி ஆய்வு செய்கிறார்.
விநாயக பிம்பத்தின் மூலத்தைச் சரியாகக் கணக்கிட்டுவிட முடியாது. எனினும், பிள்ளையார் வழிபாடாக தமிழ்ச் சமூகத்தில் பரவிய அவ்வணக்கத்தின் காலத்தை, இலக்கியங்கள் வழியே ஒரளவு சரியாகவே கணிக்க முடியும். அக்கணிப்பைச் செவ்வனே முன்னெடுத்திருக்கிறார் நூலாசிரியர். அவர், இந்த நூலில் முன்வைக்கும் புவியியல் காலனியவாதம், கலாச்சாரக் காலனியவாதம் போன்ற சொற்றொடர்கள் அர்த்தப்பூர்வமானவை.
புவியியல் காலனியவாதம் காலாவதியாகிப்போய்விட்ட இக்காலத்தில் கலாசாரக் காலனியவாதம் மெதுவாகத் தலையெடுத்து வருகிறது. நம் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், வாழ்க்கை முறைகள், தொழில்கள், சடங்குகள், கட்டடங்கள், கலை இலக்கியம் மற்றும் விழுமியங்கள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிக்கும் ஒற்றைச் சக்தியாக வல்லாதிக்க மாயக்கரம் ஒன்று தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது.
இப்போதும் நாம் ஆரிய – திராவிட மோதல்களிலேயே மூழ்கி இருந்தால் அக்காலனிய வாதத்துக்குப் பலியாவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது தமிழ்மொழி, தமிழினத்துக்கானது மட்டுமன்று. இந்தியத் துணைக்கண்டத்தின் பிற மொழி, இனங்களுக்கும் சேர்த்துத்தான்.
இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத் தன்மைகளை சில மேலாதிக்கக் குழுக்கள், எப்படி ஒற்றைக் களத்தில் அடைக்க முற்பட்டனவோ அப்படியான போக்கை, உலக வல்லாதிக்கக் குழுக்கள், சமீப ஆண்டுகளில் கையில் எடுத்திருக்கின்றன. அதற்கான நிமித்தங்களை இன்றைய நம் வாழ்க்கை முறைகளில் தெளிவாகவே காணலாம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் எனும் சொற்களின் துணையோடு வல்லாதிக்கக் குழுக்கள் தம் மேலாதிக்கத்தை மூன்றாம் உலக நாடுகளின் மீது சத்தமின்றித் திணித்து வருகின்றன.
அச்சொற்களின் மாயக்கவர்ச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அடிமையாகியும் வருகிறோம். இந்நூலில், விநாயக பிம்பத்தை முன்னிறுத்தி, அதை திறம்பட வழிமொழிந்திருக்கிறார் நூலாசிரியர். ஆரிய – திராவிடக் கருத்தியல்களில் இருந்து வெளிவந்து நாட்டார் – செவ்வியல் கூறுகளை விவாதிக்க வேண்டிய தருணமிது. இந்த நூலில் கவுதம சித்தார்த்தன் வெளிப்படுத்தும் தர்க்கபூர்வமான ஆய்வுக் கருத்துக்கள், நாட்டார் – செவ்வியல் தளத்தில் புதுமலர்ச்சியை ஏற்படுத்திப் போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
-முருகவேலன்.
நன்றி: தினமலர், 10/7/2016.