சிவனும் சித்தர்களும்
சிவனும் சித்தர்களும், சத்யா சுரேஷ், கண்ணதாசன் பதிப்பகம், பக்.176 விலை ரூ.100.
சித்தர்கள், கோயில்களில் உள்ள சிற்பங்களிலோ, சிலைகளிலோ சிவனைத் தேடாமல் தங்கள் சித்தத்தின் உள்ளேயே சிவனைக் கண்டு, தெளிந்து வழிபட்டதனால்தான் சித்தர்கள் எனப்பட்டனர். “சித்தன் போக்கு சிவன் போக்கு’’ என்கிற பண்டைத் தமிழரின் சொலவடை இதை உணர்த்தும். சித்தர்களிலேயே முதல் சித்தர் சிவபெருமான்தான் என்பதைத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.
பதினெண் சித்தர்களும் மெய்ஞ்ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சமய உலகிற்கும், மருத்துவ உலகிற்கும், அறிவியல் உலகிற்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். தற்போது சித்தர்கள் பற்றி பள்ளி, கல்லூரிகளில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நூல் அந்த வகையைச் சார்ந்தது அல்ல.
இந்நூலில், பதினெண் சித்தர்கள் பற்றிய அறிமுகம், சிவயோகம், சிவமருந்து, சிவமுத்திரைகள், சித்தர் ஜோதிடம், சித்தர் ரசவாதம், சிவசக்கரம், பஞ்சபட்சி சாஸ்திரம் முதலியவை பல்வேறு தலைப்புகளில் எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், இதில் குறிப்பிடப்படும் மேற்குறித்த நுட்பமான பகுதிகளைச் சொன்னவர் யார் யார்? எந்தெந்த நூல்களிலிருந்து இவை எடுக்கப்பட்டன? என்பன போன்ற எந்தவிதமான குறிப்புகளும் (அடிக்குறிப்பு) இல்லாமல், தம் சொந்தக் கருத்து போல எழுதியிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. காரணம், சித்தர்கள் தொடர்பாக ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல் பயன்தராது என்பதால். அதுமட்டுமல்ல, எடுத்தாண்ட நூல்களையாவது இறுதியில் “துணை செய்த நூல்கள்’’ எனப் பட்டியலிட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை. “தேடுங்கள் கண்டடைவீர்கள்’’ என்பதுதான் சித்தர்களின் கொள்கை. ஆனால், இந்நூலில் அதை அடைய முடியுமா…?
நன்றி: தினமணி, 30/7/2016