நான் இராமானுசன்
நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், விலை 60ரூ.
நாவல் வடிவில் ராமானுஜர்
மணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்றையும் எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர்.
ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங்களும் பொருத்தமாகவும் அளவோடும் இருக்கின்றன. வைணவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியிரைப்’ போலவே வண்ணமயமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய வேதனைனயயும் நூல் எதிரொலிக்கிறது. வைணவர்கள் அறிந்திருக்க வேண்டிய 3 ரகசியங்கள் (ரஹஸ்யத்ரயம்), 1. திருமநதிரம், 2. துவயம், 3. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற சுலோகத்தின் பொருள்.
பஞ்ச சம்ஸ்காரம் என்பது சமாஸ்ரயணம், புண்டரம், நாமம், மந்திரம், யோகம் என்ற ஐந்து. வரிசைக்கிரமமாக இவை விளக்கப்பட்டுள்ளன. நமது உடல் நமது உயிரின் (ஆன்மாவின்) வீடு, நமது ஆன்மா பிரும்மான பரமாத்மாவிட்ன வீடு. எனவே பிரும்மமும் உண்மை, உலகமும் உண்மை. ஜீவாத்மாவும் உண்மை. இதை வைணவம் தத்வத்தரயம் என்கிறது. இதில் மாயை என்பதற்கு இடமில்லை.
வைணவ சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவையில்லை. அந்தணராக இருக்க வேண்டாம். நாளும் மூன்று முறை அனல் ஒம்பும் சடங்கு செய்ய வேண்டாம். ஏழை – செல்வந்தன் வேறுபாடு இல்லை. பழைய குல அடையாளங்கள் மறைய வேண்டும். பானை செய்பவரும் வேதம் ஓதுபவரும் சிறுவினைஞர்களும் ஒன்றே என்பதுதான் வைணம் என்ற இந்த நூலில் வெகு அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் வெளியாகியிருக்கும் இந்த நூல் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நித்யானுசந்தானம் என்றால் மிகையில்லை.
-சாரி.
நன்றி: தி இந்து, 27/8/016.