மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள்

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள், வடுவூர் சிவ. முரளி, மீனாட்சி பிரசுரம், பக். 200, விலை 150ரூ.

இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருபவர். இவரது ‘குறளமுதக் கதைகள்’ என்ற நூலை ஆய்வு செய்த ஒருவர், எம்.ஃ.பில். பட்டமும் பெற்றுள்ளார்.

இந்நூலில் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை அவரது ‘சத்திய சோதனை’ உள்பட பல நூல்களில் இருந்து திரட்டி தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும்போது சிறுவயதில் காந்திஜி செய்த சேட்டைகள், குற்றங்கள், குறைகளையெல்லாம் படிக்கும் நமக்கு, இவரா பிறகு உலகம் போற்றும் உத்தமராக உயர்ந்தார் என்ற வியப்பை ஏற்படுத்தும்.

தவிர, அவரைப் போன்று தனது குற்றங்களை தானே ஏற்று, மனதார கவலைப்பட்டால், நமக்குள்ளும் நல்ல மாற்றம் ஏற்படும் என்பதற்கு காந்திஜியின் வாழ்க்கை நமக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். இந்நூலில் 250-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

காந்திஜி சிறுவயதில் திருட்டு, புகைப்பிடித்தல், தற்கொலைக்கு முயற்சித்தல், திருட்டுத்தனமாக அசைவ உணவு உட்கொள்ளுதல், பயம், ஆடம்பர மோகம்… என்று கீழ் நிலையில் இருந்ததையும், பிறகு உண்மை, எளிமை, ஒழுக்கம், துணிவு, தேசப்பற்று, அஹிம்சை வழி, ஜாதி – மத வேறுபாடின்மை, விடுதலைப் போராட்டம்… என்று அவர் உயர் நிலைக்கு மாறியதையும் இந்நூல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

கீழ் நிலையிலிருந்து உயர் நிலைக்கு மாறும்போது, அவர் அடைந்த கேலி கிண்டல்கள், துன்பங்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், தனது கொள்கையில் உறுதியுடன் அவர் பயணித்த சம்பவங்களும் படிப்பவர்களை பக்குவப்படுத்துகிறது. இந்நூலிலுள்ள ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு நல்ல படிப்பினையை தரும் என்பது நிச்சயம்.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 31/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *