கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு
கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 150ரூ.
மதுவெறியை விட ஆபத்தானது மதவெறி!
‘உலகில் எங்கெல்லாம் வகுப்புவாதம் மேலாதிக்கம் பெற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் அது நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டிவிட்டது. அந்த நாடுகள் யாவும் உள்நாட்டுப்போரில் சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றன அதே பாதையில் இந்தியாவையும் இழுத்துச் செல்வதுதான் இங்குள்ள வகுப்புவாத சக்திகளின் திட்டம்.
அவர்கள் பாகிஸ்தானை எதிரியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களது நடவடிக்கை அரசியல் ரீதியாக இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்’ என்ற முன்னுரையைப் படிக்கும்போதே பதற்றமாக இருக்கிறது.
புத்தகமாக இடம்பெற்றுள்ள 44 கட்டுரைகளில் 8 கட்டுரைகள் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எழுதப்பட்டவை. மற்றவை, ஆட்சிக்கு வந்தபிறகு எழுதப்பட்டவை. மதவாத அரசியலை மட்டும் கட்டிக்காட்டாமல், தலித்திய நோக்கில் கொட்டியும் காட்டி உள்ளார் ரவிக்குமார். தேர்தல் அரசியலையும், தத்துவ அரசியலையும் உள்வாங்கியவர் என்பதால், ரவிக்குமாரின் எழுத்துகளில் நடைமுறைப் பிரச்னைகள் கொள்கைத் தெளிவுடன் பேசப்படுகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் கட்சிகள்… என அனைத்து இயக்கங்களையும் புரிந்துகொள்ள உதவும் கட்டுரைகள் இவை. வலதுசாரி மனோபாவம் இன்று தமிழகத்தில், எழுச்சி பெற்று வருகிறது. இந்தச் சூழலில், திராவிட இயக்கத்தை இனம் காண்பதும், தமிழ்த் தேசியத்தைப் பிரித்துப் பார்ப்பதும் மிக நுணுக்கமாக விளக்கப்படுகிறது. ‘வலதுசாரி அரசியலை எதிர்ப்பது என்பது மத அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு முடிந்துவிடாது. இன மற்றும் சாதிய அடிப்படைவாதத்தையும் சேர்த்தே எதிர்த்தாக வேண்டும்’ என்கிறார் ரவிக்குமார். ‘மதுவெறியை விட ஆபத்தானது மதவெறி. காந்தியைக் கொன்றவன் ஒரு குடிகாரன் அல்ல. இந்து மத வெறியன்’ என்ற வார்த்தைகள் சுடுகின்றன. ஒரு கொரில்லா போராளியாக சே குவேரா எத்தனையோ பேரை போரில் கொன்று இருக்கலாம். ஆனால் நாய்க்குட்டிக்காகத் துடிக்கிறது அவரது இதயம். அதை உதாரணமாகக் காட்டி, ஆயிரக்கணக்கான மக்களின் படுகொலையை ஒரு நாய்க்குட்டியின் சாவுடன் ஒப்பிட்ட மோடியை நினைவூட்டும்போது இதயம் துடிக்கிறது. இந்த அனைத்துக் கட்டுரைகளின் அடிநாதமாக ஒலிப்பது இதுதான். ‘மாநில நலன்களைப் பாதுகாக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டாச்சி ஒன்றை மத்தியில் அமைப்பது’ இது எப்போது சாத்தியம்?
நன்றி: ஜுனியர் விகடன், 13/9/2017.