நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்
நான் பால் அருந்துவதைத் துறந்த நாள், சுதா மூர்த்தி, தமிழில் உமா மோகன், சப்னா புக் ஹவுஸ், பக். 204, விலை 130ரூ.
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய தொகுப்பு இந்தப் புத்தகம். நூலாசிரியர் சுதாமூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர்.
நூலாசிரியரின் உதவியால் இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவி பெற்று பொறியியல் படித்த தபால்காரரின் மகன், பின்னாளில் உயர்ந்த நிலைக்கு வருகிறார். தனது தோழியின் மகளைப் பெண் பார்க்க வந்த அந்த இளைஞனின் குடும்பம்.
எதேச்சையாக சுதா மூர்த்தியை அந்த வீட்டில் சந்திக்கிறது. ஆனால் யாருமே அவரைத் தெரிந்ததைப்போல் காட்டிக் கொள்ளவில்லை. வீடு சென்ற பின்பு அந்தச் சம்பந்தம் வேண்டாம் என்று தகவல் அனுப்புகின்றனர். பாரம்பரியமாக வசதியான குடும்பம் என்று பெண் வீட்டில் தெரிவித்திருந்தனர் இளைஞனின் குடும்பத்தினர். தற்போது நூலாசிரியரின் மூலம் தங்களின் முன்னாள் ஏழ்மை நிலை தெரிந்துவிடும் என்று சம்பந்தத்தைத் மறுத்துவிடுகின்றனர்.
இதுபோன்று தனது வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சந்தித்த மனிதர்களைப் பற்றிய சம்பவங்களை சிறு சிறு அத்தியாயமாகத் தொகுத்துள்ளார் சுதா மூர்த்தி. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வோர் அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு சம்பவத்தைப் படிக்கும்போது, நமக்கும் அதுபோன்று ஏற்பட்ட அனுபவம் அல்லது அந்தச் சம்பவத்தில் இடம் பெற்றிருந்த நபர் போன்று மற்றொருவரின் ஞாபகம் நிழலாடுகிறது.
புத்தகத்தின் தலைப்புக்கான சம்பவமும் மிகவும் சுவாரசியமானது. எளிமையான நடையில் எழுதப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி, 13/11/2017.