பயன் தரும் பட்டிமன்றம்
பயன் தரும் பட்டிமன்றம், புலவர் கு.அனாதரட்சகன், மீனாட்சி பிரசுரம், பக். 304, விலை 300ரூ.
பட்டிமன்ற நிகழ்ச்சி என்பது மற்ற நிகழ்ச்சிகளை விட அறிவார்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல நூல்களைப் படித்து அறியக்கூடிய பல்வேறு கருத்துக்களை, தகவல்களை பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது.
தவிர, ஒரு விஷயத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறைக் கருத்துக்களையும், அவை குறித்த ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களையும் மனதில் ஆழமாகப் பதிய உக்கிரமாகவும், சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையாகவும் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கவர்ந்தவை.
அந்த வகையிலேயே இந்நூலையும் ஆசிரியர் படைத்துள்ளது பாராட்டத்தக்கது. இன்றைய மாணவர்கள் செல்லும் பாதை ஆக்கப் பாதையா, அழிவுப் பாதையா?, தூதுவரில் மேம்பட்டவர் கிருஷ்ணனா, அனுமனா? நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாய் இரப்பது சாதி வெறியா, சமய வெறியா? வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் அரசா, மக்களா? பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் விளைந்தவை நன்மையா, தீமையா? காமராசர் மக்களின் மனதில் நீங்கா இடம் பெறக் காரணம் மக்கள் பணியா, அரசியல் பணியா?…
இப்படி பன்முகத் தலைப்புகளில் 30-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை எழுதி, அவற்றின் மூலம் எண்ணற்ற தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். இதில் வரும் நடுவர்கள், அணித்தலைவர்கள், பேச்சாளர்கள் அனைவருமே யதார்த்தமாக அமைந்து, நல்ல தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது சிறப்பானது.
ஒவ்வொரு பட்டிமன்றமும் படிப்பதற்கு ஆர்வத்தையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்துவதோடு, மாணவர்களுக்கு பயன் தரும் விதத்தில் உள்ளதும் பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 4/10/2017.