360 டிகிரி

360 டிகிரி, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக் 172, விலை 150ரூ.

சமகால உணர்வுகளை பற்றிய தீவிர சிந்தனையை முன் வைக்கும்படியான பல கட்டுரைகள் இந்நுாலில் அடங்கியுள்ளன. நடப்பு அரசியல், சமூக பிரச்னை, இலக்கியம், இயக்கங்கள் ஆகியன பற்றிய கண்ணோட்டங்களை ஆழமான பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

நடுநிலையாகவும், துணிவு மிக்க நெஞ்சுரத்தோடும் கட்டுரைகளைத் தார்மீகமான கருத்துக்களின் பின்னணியில் தன்னிலை நோக்கில் சொல்லிச் செல்கிறது இந்நுால். மாநில அரசியல் முதல், மத்திய அரசியல் வரையிலான அலசல் பார்வைகளைச் சித்திரித்து காட்டும்படியான இந்நுால், அண்மைக் காலத்திய நிகழ்வுகளின் பதிவுகளை நிதர்சனமாக காட்டத் தவறவில்லை.

இன்றைய அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறெல்லாம் சிதறுண்டு போயிருக்கின்றன என்பதை, பல கோணங்களில் தடை விடைகளோடு ஆசிரியர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது; அது குறித்த ஐயங்கள்; அதன் பின்னணியில் நிகழ்ந்தவை; சசிகலாவின் விஸ்வரூபம்; ஜெ., பற்றிய அமைச்சர்களின் பேச்சுகள்; மக்களிடம் அவற்றால் காணப்பட்ட பரபரப்பும், தவிப்பும் பற்றிய கண்ணோட்டங்கள் ஆகியன கூறப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், அவர்களின் தனிப்பட்ட போக்குகள், தமிழகத்திற்கு பாதகமாய்ப் போனதன் வரலாற்றுத் துளிகளை துலக்கமாய் கூறும் பல கட்டுரைகள் ஆழமாகச் சிந்திக்கத் துாண்டுகின்றன.

அண்மைக்கால தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகள், ஆதிக்கச் சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பணத்தால் முதன்மை படுத்துதல், முன்னாள் முதல்வரின் அரசியல் சதுரங்கமும், சாமர்த்தியமான செயற்பாடுகளும், எதிர்க் கட்சியினரின் போக்கு, தமிழீழ நிகழ்வுகளில் தமிழக அரசியலில் நிலைப்பாடு, காவிரி பிரச்னை, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த, நவ., 8ல், மோடி கொண்டு வந்த பணமதிப்பு குறைப்பு பற்றிய கண்ணோட்டம்.

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மல்லுக்கட்டி நடத்திய போராட்டம், டாஸ்மாக் விவகாரம், மீத்தேன் போராட்டம், ஜெயமோகனின் விருது மறுப்பு முதலியவற்றை ஆசிரியர் துலக்கமான பார்வையோடு ஓரஞ்சாராது, நடுநிலையாகத் தம் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

படிப்போரை உணர்வுப்பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் ஆழ்ந்து சிந்திக்கும்படியான கருத்துகள், மொழி நடையின் கூர்மையால் தெளிவாக்கம் பெற்றுள்ளன.

–ராம.குருநாதன்.

நன்றி: தினமலர், 12/11/2017.

Leave a Reply

Your email address will not be published.