வகாபிசம் எதிர் உரையாடல்
வகாபிசம் எதிர் உரையாடல், ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், பக். 160, விலை 140ரூ.
மார்க்ஸியவாதியான இந்நூலாசிரியர் இப்படியொரு நூலை எழுதியுள்ளது ஆச்சரியப்படத்தக்கது. ‘இஸ்லாம்’ மூடநம்பிக்கைகளை அகற்ற மட்டுமின்றி, உலகில் அமைதியை நிலைநாட்டவும் தோன்றிய மார்க்கம்.
ஆனால், இன்று அம்மார்க்கம், அப்படிப்பட்டதா, இல்லையா என்ற விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. காரணம், இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளிலேயே நடக்கும் தீவிரவாதச் செயல்களால், இஸ்லாமிய மக்களே கணிசமான அளவில் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஓர் இறை நம்பிக்கைகயையும், அழகிய வாழ்வியலையும் முழுமையான முறையில் போதித்த இம்மார்க்கத்தின் ‘ஈமான்’ என்ற மார்க்க நம்பிக்கை புறம் தள்ளப்பட்டு, பகுத்தறிவு என்ற ஆய்வுத் தன்மை வரம்பு மீறி உட்புகுந்ததால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அமைத்துத் தரப்பட்ட இஸ்லாத்தையே, தூய்மைப்படுத்தும் பணி மேலோங்கியது. இப்பணியில் ஈடுபட்ட சிலர் அடைந்த உலக ஆதாயங்கள், மேலும் சிலரை ஈர்த்து தீவிரவாத இயக்கங்களையும் உருவாக்கிவிட்டது.
அதன் விளைவாக உலகின் புனித மிக்க மார்க்கமான இஸ்லாம், இன்று பலரின் விமர்சனத்திற்கு ஆளானது. இதற்கு வழிவகுத்தவர் 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய முகமது இபின் அப்துல் வகாப். இவரது வழிமுறை (வகாபிசம்) சில மார்க்க அறிவு ஜீவிகளை ஈர்க்க, அதுவே இஸ்லாமிய பாமர மக்களிடமும் திணிக்கப்பட, இதில் எது சரி, எது தவறு என்ற குழப்பநிலை தோன்றியது. இதன் விளைவு, இன்று இஸ்லாம் பல்வேறு தலைமையின் கீழ் பலவாறு பிரிந்து கிடக்கிறது. எந்தெந்த வகையில், இந்த வகாபிசக் கொள்கை இஸ்லாத்திற்கள் புகுந்து, முரண்பாடுகளை ஏற்படுத்தி, ஒற்றுமையைச் சிதைத்துள்ளது என்பதை, 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளது – இஸ்லாம் பற்றிய உண்மையான புரிதலை உண்டாக்குகிறது.
-பரக்கத்
நன்றி: துக்ளக், 8/11/2017.